

எந்த ஷா வந்தாலும் பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் பேசியது சூட்டைக் கிளப்பி உள்ளது. தமிழக அரசியல் நிலவரம் குறித்து பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசினோம். அவரது பேட்டி இங்கே.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கவேண்டிய அவசியம் என்ன வந்தது?
2005-ல் தொடங்கப்பட்டாலும், 2009-ல் தான் மகாத்மா காந்தியின் பெயர் இந்த திட்டத்துக்கு சூட்டப்பட்டது. எதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது. தற்போது, கிராமப்புற சீர்திருத்தத்துக்கான புதிய திட்டமாக, அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியாகத்தான் நாம் இதைக் கருத வேண்டும். பெண்களின் மேம்பாடு, கிராமப்புறங்களின் வளர்ச்சி, வேலை நாட்கள் 100-லிருந்து 125 நாட்களாக அதிகரிப்பு, சொத்துகளை மேம்படுத்துவது, அதை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்துவது என்பது போன்ற பல்வேறு விஷயங்களை இந்த புதிய திட்டம் கொடுக்கிறது. எனவே, அதனை வேறுபடுத்தி பார்ப்பதற்காகத் தான் பெயர் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
எந்த ஷா வந்தாலும் தமிழகத்தில் பாஜக-வால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறாரே ஸ்டாலின்?
முதல்வர் ஸ்டாலினின் பேச்சு, அவருக்குள் இருக்கும் பாஜக மீதான அச்சத்தை உணர்த்துகிறது. ஏனென்றால், தொடர்ந்து பாஜக மீதும், மத்திய அரசு மீதும் அவர் வைக்கக்கூடிய விமர்சனங்கள், திமுக கொள்கைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற அவருடைய பயத்தைத் தான் வெளிப்படுத்துகிறது.
திமுக கூட்டணிக் கட்சிகள் எதற்காக எஸ்ஐஆரை எதிர்க்கிறார்கள் என நினைக்கிறீர்கள்?
அந்தந்த கட்சியில் இருக்கக்கூடிய தொண்டர்கள் எஸ்ஐஆரை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனாலும் இதை அரசியலாக்க வேண்டுமென்றே ராகுல்காந்தி, ஸ்டாலின் போன்றவர்கள் மக்களை ஏமாளிகளாக்க இதை எதிர்ப்பது போல பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
நிர்ணயிக்கப்பட்டதை விட குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்குகூட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு, கோவை, மதுரையை நிராகரித்தது ஏன்?
மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அந்த நகரத்தின் மக்கள் தொகையை மட்டுமல்லாது அதைச் சார்ந்த புறநகரங்களின் மக்கள் தொகையையும் சேர்த்து கணக்கிட்டு திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். ஆனால், கோவை, மதுரையை பொறுத்தவரை அந்த நகரங்களின் மக்கள் தொகையை மட்டும் கொடுத்துவிட்டு, புறநகரை கணக்கில் கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். இதுமுழுக்க முழுக்க மாநில அரசின் தவறு.
டாஸ்மாக் வேண்டாம் என்கிறீர்கள். ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களிலும் மது விற்பனை நடக்கிறதே?
பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரு சிலவற்றில் மது விற்பனை நடப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், தமிழகத்தில் டாஸ்மாக்கில் நடக்கும் ஊழல் போல மற்ற மாநிலங்களில் இல்லை. இங்கு தினந்தோறும் நடக்கும் பல படுகொலைகள், விபத்துகள் டாஸ்மாக் மதுவால் தான் நடக்கிறது. அரசுப் பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளை ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமை செய்கிற மிகமோசமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவி வருகிறது. தமிழகத்தில் ஒருவர் சாப்பிடாமல், தூங்காமல் கூட இருந்து விடலாம். ஆனால், மது குடிக்காமல் இருக்க முடியாது என்ற சூழ்நிலைக்கு அரசே மக்களைத் தள்ளி விட்டிருக்கிறது என்பதால் தான் பாஜக இதை எதிர்க்கிறது.
தமிழகத்தில் பாஜக கூட்டணியை வலுப்படுத்துவதில் ஏன் தாமதம்?
கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் அமைவது தான். எல்லோரும் ஒரே மாதிரியாக செயல்பட்டால் கூட்டணியே வேண்டாமே; ஒரே கட்சியாக இருந்துவிடலாமே. நீங்கள் கேட்கலாம், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிக்கிறார்களே என்று. தமிழகத்தில் போனி ஆகாமல் இருக்கும் அந்தக் கட்சிகள், திமுக-விடம் காசு வாங்கி கொண்டு தான் தேர்தலில் நிற்கிறார்கள். அவர்கள் கூட்டணி வியாபாரக் கூட்டணி. எங்கள் கூட்டணி கொள்கைக் கூட்டணி. எனவே, தேர்தல் காலத்தில் கூட்டணி வலுப்பெறும்.
ஓபிஎஸ், டிடிவி.தினகரன் விவகாரத்தில் பாஜக-வின் நிலைப்பாடு என்ன?
திமுக-வை வீழ்த்த வேண்டுமென்றால், அந்த எண்ணம் கொண்ட அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும் என்று பாஜக தொடர்ந்து கூறிக்கொண்டே வருகிறது. முடிந்தவரை அனைவரும் ஒரே பக்கம் நிற்கும் வகையில் முயற்சி எடுப்போம். விரைவில் கூட்டணி குறித்து இறுதியான முடிவை எட்டுவோம்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொன்ன பிறகும் தவெக-வுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருக்கிறீர்களே..?
எல்லா கட்சிகளுக்கும் இடையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கை வேறுபாடு இருக்கலாம். ஆனால், எல்லோரும் ஒத்துப்போகும் ஒரே கருத்து, திமுக-வை வீழ்த்த வேண்டும் என்பது தான். எனவே, மற்ற பிரச்சினைகளையெல்லாம், ஒதுக்கி வைத்துவிட்டு, ஒற்றை இலக்கை மனதில் வைத்து எல்லோரும் இணைய வேண்டும். இதற்கு தவெக-வும் விதிவிலக்கல்ல. அதற்கான காலமும் கனியும் என நாங்கள் நம்புகிறோம்.