

தமிழகத்திலுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பிப்ரவரி மாதம் முழுவதும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பரப்புரை நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை விவரம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஜனவரி 20-ம் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பரப்புரை பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.
இந்த பரப்புரையின் கீழ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நட்சத்திரப் பேச்சாளர்கள், மாநிலம் முழுவதும் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், பிப்ரவரி மாதம் முழுவதும் தீவிரமான பரப்புரை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
இந்த பரப்புரையின்போது ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். அதேபோல், தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரை ஒரே இடத்தில் அழைத்து, மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நட்சத்திரப் பரப்புரையாளர்கள் அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியும், மக்களின் கோரிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யவும் மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.