

சென்னை: கடந்த முறை எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடந்ததால் திமுக வெற்றி பெற்றது. இப்போது நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளதால் அதிமுக அரசு அமையும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
பாமக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம், சென்னை அடுத்த பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி நேர்காணல் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்றைய நேர்காணலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடந்ததால் திமுக எளிதாக வெற்றி பெற்றது. இந்த முறை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து விட்டோம். அதனால் திமுக வெற்றி பெற முடியாது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான ஆட்சி நடைபெறுகிறது. திமுக ஆட்சியில் போதை கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்ற பயத்தில், இது அமித் ஷாவால் உருவான கூட்டணி என்று ஏதேதோ முதல்வர் பேசிக் கொண்டிருக்கிறார். அதிமுக கூட்டணியில் இணைந்திருக்கும் கட்சியின் தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.
எங்கள் கூட்டணியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு ரூ.3 ஆயிரம் கொடுத்தது, டாஸ்மாக் மூலம் மீண்டும் தமிழக அரசுக்கே வந்து விட்டது.
ரூ.12 லட்சம் கோடி முதலீடு வந்துவிட்டதாகவும், 34 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் பொய்யான அறிக்கையை எழுதி ஆளுநர் உரையில் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இத்தனை ஆண்டுகால திமுக ஆட்சியில் ஒரு லட்சம் கோடிக்கு குறைவாகத்தான் தொழில் முதலீடுகள் வந்துள்ளன. தமிழக மக்கள் திமுக ஆட்சியை அகற்ற தயாராகி விட்டார்கள். நிச்சயம் தேர்தலில் அதிமுக தலைமையிலான அரசு அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.