கரூர் சம்பவம் குறித்த பேச்சு: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையீடு

கரூர் சம்பவம் குறித்த பேச்சு: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையீடு
Updated on
2 min read

சென்னை: ‘கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜுனாவின் மரியாதையற்ற பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அமைச்சர் அதாவ் அர்ஜுனா ஆற்றிய பொறுப்பற்ற, தவறான, தீய நோக்கம் கொண்ட மற்றும் மரியாதையற்ற பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்’ எனக் கோரப்பட்டுள்ளது.

மேலும் ‘ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு, திமுக, அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காவல் துறைக்கு எதிராக ஒரு பொய்யான கதையை உருவாக்குவதோடு, ஒரே நேரத்தில் பொதுமக்களின் கருத்தை திசை திருப்பவும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி நடத்தப்படும் ஒரு விசாரணையில் தலையிடவும் முயல்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜுனாதான் மெயின் அக்யூஸ்ட். அதிமுகவை சேர்ந்த இரண்டு முன்னாள் அமைச்சர்களை ஆளும் கட்சியில் இணைக்கும் விழாவில் பொறுப்பற்ற முறையில் பேசியது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மக்களுக்கு ஆத்திரம் ஏற்படக்கூடிய வகையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசி இருக்கிறார். ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும்

கரூரில் நடைபெற்ற சம்பவத்தைப் பற்றி அவர் பொய்யும் புரட்டுமாகப் பேசி உள்ளார். கரூர் சட்டமன்ற உறுப்பினராக அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் ஆளும் கட்சியிலேயே சேர்ந்துவிட்ட காரணத்தினால் கரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. அந்தத் தொகுதி மக்களுடைய கவனத்தை திசை திருப்புகிற நோக்கத்தில் நேற்று அவ்வாறு பேசியிருக்கிறார்.

கரூர் சம்பவத்தின்போது ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையை மனசாட்சி உள்ளவர்கள், அரசியல் தெரிந்தவர்கள், நாகரிகம் அறிந்தவர்கள் என அத்தனை பேருமே பாராட்டினார்கள். விஜய்யைப் போல 41 பேர் இறந்தபோது முகத்தை மூடிக்கொண்டு ஓடிப் போய் ஒளிந்து கொள்ளவில்லை.

ஸ்டாலின் அன்று மக்களோடு துணை நின்றார். உயிர்களைக் காப்பாற்ற என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எல்லாம் உடனடியாக எடுத்து மக்களின் உயிரைக் காப்பாற்றினார் என்பதை அந்தப் பகுதி மக்களும் மறக்க மாட்டார்கள் தமிழ்நாடும் மறந்திருக்காது.

கரூர் வழக்கை விசாரிப்பதற்கு எஸ்ஐடி அமைத்து அதன் தலைவராக யாரை அன்று நாங்கள் நியமித்தோமோ அதே காவல்துறை அதிகாரியை தான் இன்று மிக முக்கிய பொறுப்பான உளவுத்துறை ஐஜி ஆக நியமித்து உள்ளனர். ஆக நடுநிலையோடு தான் கடந்த திமுக அரசு நடந்து கொண்டது என்பதற்கு இதுவே சாட்சி.

நாங்கள் அமைத்த எஸ்ஐடி குழுவின் விசாரணை ஒழுங்காக நடைபெற்றது. ஆனால் இவர்களே சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டார்கள். சிபிஐ விசாரணையும் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விவகாரதத்தில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர் நேற்றைக்கு பேசிய ஆதவ் அர்ஜுனா. அவர்தான் மெயின் அக்யூஸ்ட். அக்யூஸ்ட் லிஸ்ட்டில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா நேற்றைக்கு சட்டம் தெரியாமல் நீதிமன்ற நடவடிக்கை புரிந்து கொள்ளாமல் பேசிக்கொண்டு உள்ளார்.

உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி வழக்கை ஓய்வு பெற்ற ரநீதிபதியுடைய தலைமையில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அந்த விசாரணைக்கு விஜய் இரண்டு முறை போய் வந்தார். புஸ்ஸி ஆனந்த் , நிர்மல் குமார், முதல்வரின் தனிச் செயலாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஜெகதீஷ் , ஆதவ் அர்ஜுனா என இவர்கள் எல்லாம் ஏ1, ஏ2, ஏ3 என ஆகியூஸ்ட லிஸ்ட்டில் உள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரிக்கிற போது வழக்கை பற்றி ஒரு அக்யூஸ்ட், வழக்கின் விசாரணையை கெடுக்கிற வகையில் நேற்றைய தினம் பேசி இருக்கிறார். ஆகவே இது குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்காக திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்திலே வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம். அதேபோல அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர உள்ளோம்.

ஆதவ் அர்ஜுனாவுடைய ஆட்டத்துக்கு ஓர் எல்லையே இல்லாமல் போய் கொண்டுள்ளது. அவர் யார் என்பது இந்த நாட்டுக்கு தெரியும். இந்த நாட்டையே திவாலாக்கும் லாட்டரி குடும்பத்தை சார்ந்தவர். இவருடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் மீது கேரளாவில ரூ.928 கோடிக்கு லாட்டரி சீட்டு ஊழல் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இவருடைய மனைவி அந்த வழக்கில் ஒரு அக்யூஸ்ட் . இவர் இந்த வழக்கில் ஒரு அக்யூஸ்ட்.

இப்படிப்பட்ட அக்யூஸ்டுகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு எங்களை குற்றம் சொல்வதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்களுக்கு உரிய வகையிலே சட்டரீதியாக நாங்கள் பதில் சொல்வோம் நடவடிக்கை எடுப்போம்.

முன்னாள் அமைச்சர் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது தொகுதியிலே ஆய்வுக்கு போகிறபோது கைது செய்திருக்கிறார்கள் என்றால் இது சர்வாதிகாரத்தின் உச்சம் இதை நிச்சயமாக சட்டரீதியாக நாங்கள் சந்திப்போம்.

இந்த அராஜகத்தை எல்லாம் மிக விரைவில் நாங்கள் முடிவுக்கு கொண்டு வருவோம். இந்த ஆட்சி எத்தனை நாளுக்கு என்பதை பொதுமக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எந்தவிதமான ஆக்கப்பூர்வமான பணியும் இந்த ஆட்சியில் நடக்கவில்லை. தினமும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. எல்லாவிதமான தவறுகளும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதையெல்லாம் கவனிப்பதற்கு இன்றைக்கு இருக்கிற ஆட்சியாளர்களுக்கு நேரமில்லை.

திமுக என்பது வெட்ட வெட்ட துளிர்க்கிற மரம் அரைக்க அரைக்க மணக்கிற சந்தனம் தீட்ட தீட்ட ஒளிர்கிற வைரம் என்பதை இன்றைக்கு புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கிற புதியவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

கரூர் சம்பவம் குறித்த பேச்சு: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையீடு
“ஆளுநருக்கு திட்டங்களை ஆய்வு செய்யும் அதிகாரம் இல்லை” - அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in