

கோப்புப் படம்
சென்னை: திருவிக நகர் தொகுதியில் ரவுடிகளை இறக்கி பணப் பட்டுவாடா செய்ததாக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் மீது திமுக வேட்பாளர் புகார் மனு அளித்துள்ளார்.
திருவிக நகர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், வெளியூர்களில் இருந்து ரவுடிகளை இறக்கி வாக்காளர்களை மிரட்டுவதாகவும், போலி டோக்கன்கள் மற்றும் பணம் விநியோகித்து தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகவும் குற்றம்சாட்டி, அத்தொகுதியின் திமுக வேட்பாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் சென்னை காவல் ஆணையர் ஆகியோருக்கு புகார் மனு அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: திருவிக நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், தேர்தல் நடத்தை விதிகளை முற்றிலுமாக மீறி செயல்பட்டு வருகிறார்.
குறிப்பாக வெளி மாவட்டங்களிலிருந்து ரவுடி கும்பலை தொகுதிக்குள் இறக்கி, அவர்கள் மூலம் மற்ற வேட்பாளர்களை பிரச்சாரம் செய்யவிடாமல் மிரட்டியதுடன், பெரம்பூர் பாரதி நகரில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த வெளியூர் நபர்களை தங்கவைத்து, அங்கிருந்து பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருகிறார்.
அதிமுக வேட்பாளர் தரப்பில் 71, 72-வது வார்டுகளில் வாக்காளர் குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் மற்றும் குலவிளக்கு திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அதிமுக சின்னம் அச்சிடப்பட்ட போலி செக் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.
தண்ணீர் குடங்கள் மூலமாக ரகசியமாக பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளது. நீதிமன்ற விசாரணையில் உள்ள தனது கணவர் மரண வழக்கை பயன்படுத்தி, தனது 3 வயது குழந்தையுடன் பிரச்சாரம் செய்து பெண் வாக்காளர்களிடம் அதிமுக வேட்பாளர் அனுதாபம் தேட முயல்கிறார்.
அதேபோல் தொகுதி முழுவதும் பொது இடங்கள், மின்சாரப் பெட்டிகள் மற்றும் அரசு சுவர்களில் தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பிரச்சாரத்துக்கு உரிய அனுமதியின்றி வெளிமாவட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
திருவிக நகர் தொகுதியில் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, அடுத்த 48 மணி நேரத்துக்குள் தொகுதியில் தங்கியிருக்கும் வெளியூர் நபர்களையும், ரவுடிகளையும் அப்புறப்படுத்த வேண்டும். அதிமுக வேட்பாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.