புதுவையில் பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு தராத திமுக, பாஜக, அதிமுக

சரிபாதியாக வாய்ப்பளித்த நாம் தமிழர் கட்சி
புதுவையில் பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு தராத திமுக, பாஜக, அதிமுக
Updated on
2 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் ஒவ்வொரு முறையும் பெண் உறுப்பினர்களுக்கு குறைந்த அளவே கட்சிகள் வாய்ப்பளித்து வருகின்றன. புதுச்சேரியின் முதல் சட்டப்பேரவை யில் (1963 முதல் 1964) சரஸ்வதி சுப்பையா, சாவித்திரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2-வது சட்டப்பேர வையில் (1964 - 68) பத்மினி சந்திர சேகரன், அங்கம்மாள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 3-வது சட்டப்பேரவையில் (1969 - 74) வீரம்மாள் தேர்வு செய்யப் பட்டார். 4-வது, 5-வது சட்டப்பேரவைக்கு பெண்கள் யாரும் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. 6-வது சட்டப்பேரவையில் (1980-83) ரேணுகா அப்பாதுரை தேர்ந்தெடுக் கப்பட்டார்.

அவர் அமைச்சராகவும் இருந்தார். 7-வது சட்டப் பேரவையில் (1985-90) கோமளா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சட்டப்பேரவைக்கு செல்வி சுந்தரம் நியமன எம்எல்ஏ-வாக நியமிக்கப்பட்டார். 8-வது சட்டப்பேரவைக்கு பெண்கள் யாரும் எம்எல்ஏ-வாக தேர்ந் தெடுக்கப்பட வில்லை.

9-வது சட்டப்பேரவைக்கு 1991-ல் கே.பக்கிரி அம்மாள், 10-வது சட்டப்பேரவைக்கு 1996-ல் அரசி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 11-வது சட்டப்பேரவையில் 2001-ல் மேரிதெரசா நியமன எம்எல்ஏ-வாக இருந்தார். அதன்பிறகு பெண் எம்எல்ஏக் கள் யாரும் இல்லை.

15 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நெட்டப்பாக்கம் (தனி) தொகுதியில் போட்டியிட்ட வி.விஜய வேணி, என்.ஆர். காங்கிரஸ் சார்பில் திருபுவனை (தனி) தொகுதியில் போட்டியிட்ட கோபிகா, நெடுங்காடு (தனி) தொகுதியில் போட்டியிட்ட சந்திர பிரியங்கா, திமுக சார்பில் காரைக்கால் நிரவி தொகுதியில் போட்டியிட்ட கீதா ஆனந்தன் ஆகிய 4 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

கடந்த 2021-ல் என்.ஆர்.காங்கிரஸில் சந்திரபிரியங்கா மட்டுமே வென்று அமைச்சராகி, பின் நீக்கப்பட்டு எம்எல்ஏவாக இருந்தார். வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் திமுக 13 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் ஒரு பெண் வேட்பாளருக்கு கூட அக்கட்சி வாய்ப்பு தரவில்லை. பாஜக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அந்தக் கட்சியும் பெண் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இரு தொகுதிகளில் போட்டியிடும் அதிமுகவும் பெண் வேட்பாளர்கள் யாருக்கும் வாய்ப்பு தரவிலலை. 16 தொகுதிகளில் களம் காணும் என்.ஆர்.காங்கிரஸ், முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா, முன்னாள் எம்எல்ஏ கோபிகா ஆகியோருக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பளித்துள்ளது.

தங்களுடன் கூட்டணி சேர்ந்திருக்கும் நேயம் மக்கள் கழகத்துக்கு இரு தொகுதிகளை அளித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம், மீதம் உள்ள 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இக்கட்சி இரு பெண்களுக்கு வாய்ப்பு தந்துள்ளது.

16 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் ஒரு பெண் வேட்பாளருக்கு வாய்ப்பு அளிக்கிறது. ஆனாலும், அக்கட்சி அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளிலேயே தங்கள் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்து குழப்பத்தை ஏற்படுத்தியி ருக்கும் காங்கிரஸ், யார் யார் மனுத் தாக்கல் செய்துள்ளனர் என்ற முழு விவரத்தையோ, மனுவை யார் வாபஸ் வாங்கப் போகிறார்கள் என்ற விவரத்தையோ இதுவரையிலும் அளிக்காமல் இழுத்தடித்து வருகிறது.

இறுதிப்பட்டியல் வெளியாகும் போதே காங்கிரஸ் தரப்பில் யார் உள்ளனர் என்பது தெரியவரும். இவர்களுக்கு மத்தியில் நாம் தமிழர் கட்சி, ஏற்கெனவே கூறியிருந்தது போலவே, சரிபாதியாக 50 விழுக்காடு வாய்ப்பை பெண்களுக்கு அளித்துள்ளது.

இக்கட்சி புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 28-ல் தனித்துப் போட்டியிடுகிறது. இதில் சரிபாதியாக 14 பெண் வேட்பாளர்களை நிறுத்தி யிருக்கிறது.

‘சமூக நீதியை பேசினால் மட்டும் போதாது..’

முக்கிய கட்சிகள் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காதது பற்றி புதுச்சேரி மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலர் ஜெகன்நாதன் கூறுகையில், "தேசிய கட்சிகளான பாஜக, சமூக நீதி மற்றும் பெண்கள் உரிமை பற்றி தொடர்ச்சியாக அரசியல் பிரச்சாரம் செய்து வரும் திமுக ஆகிய பிரதான கட்சிகள் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட ஒரு பெண் வேட்பாளருக்கு கூட வாய்ப்பு வழங்காதது கடும் கண்டனத்திற்கு உரியது.

நாடாளுமன்றத்தில் 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசியல் சாசனம் 106-வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி சமூகத்தில் சரி பாதிக்கும் மேலாக உள்ள பெண்களுக்கு 33- விழுக்காடு இடபங்கீடு சட்டப்பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் மத்திய அரசை வழிநடத்தும் பாஜக, சமூக நீதி பேசி தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக போன்ற கட்சிகள் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்கள் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்க வில்லை.

நீண்ட கால ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி ஒருவருக்கு மட்டும் வாய்ப்பு தந்துள்ளது. அதையும் அவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. பெண்கள் அமைப்புகள் இதுபற்றி கேள்வி எழுப்ப வேண்டும்” என்று தெரிவித்தார்.

புதுவையில் பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு தராத திமுக, பாஜக, அதிமுக
திரிணமூல் vs பாஜக: மேற்கு வங்க தேர்தல் களம் 2026 எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in