

மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 என இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் போட்டி என்கின்றனர் அம்மாநில அரசியல் பார்வையாளர்கள்.
மம்தாவின் அரசியலிலும், பாஜகவின் வலுவான எதிர்ப்பிலும் எப்போதே காங்கிரஸ் மாநிலத்தில் ஓரங்கட்டப்பட்டுவிட்டது என்று கூறும் அவர்கள், கடந்த 2024 மக்களவைத் தேர்தலிலேயே காங்கிரஸ் 42 இடங்களில் போட்டியிட்டு ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றதை, மேற்கு வங்கத்தில் காங்கிரஸின் பரிதாப நிலவரத்துக்கு சாட்சியாக சுட்டிக் காட்டுகின்றனர். இப்போதைக்கு அங்கு இடதுசாரிகளின் நிலையும் இதேதான்.
இந்த அடிப்படையில் பார்க்கையில், மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கான தேர்தலில் மிகத் தெளிவான இருமுனைப் போட்டியே நிலவுகிறது எனப் புரிந்து கொள்ளலாம்.
4-வது முறையாக ஆட்சியைப் பிடிப்பாரா மம்தா?
2011-ம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி, புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையிலான 34 ஆண்டுகால கம்யூனிஸ்ட் (CPI-M) ஆட்சியை வீழ்த்தியது. மேற்கு வங்க அரசியலின் திருப்புமுனை இது என்றாலும் மிகையல்ல. நந்திகிராம், சிங்கூர் நிலம் கையகப்படுத்துதல் எதிர்ப்புப் போராட்டங்கள் கொடுத்த மைலேஜ் 15 ஆண்டுகளாக திரிணமூல் காங்கிரஸ் வேகத் தடை காணாமல் வேரூன்ற வழிவகுத்துவிட்டது.
இந்த நிலையில், இந்த 2026 தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சுற்றி ஊழல் குற்றச்சாட்டு, ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொல்லப்பட்டது, உட்கட்சி பூசல்கள் எனப் பல சர்ச்சைகள் இருந்தாலும் 4-வது முறையாக அவரை முதல்வராக்கி சாதனை படைக்க வைப்பார்களா வாக்காளர்கள்? கள நிலவரம் என்ன? சற்று சுருக்கமாகப் பார்ப்போம் வாருங்கள்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 215 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் வாக்கு சதவீதம் 48.02%. பாஜக 77 இடங்களில் வெற்றி கண்டு 38% வாக்கு சதவீதத்தை பெற்றது. ஆனால், அதற்கு முந்தைய தேர்தலில் பாஜக வெறும் 3 தொகுதிகளில் வெற்றியும், 10.2 வாக்கு சதவீதமும் பெற்றிருந்ததால், 2021 தேர்தல் முடிவு மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு புதிய பலத்தைக் கொடுத்தது.
மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி இப்போது மம்தா பானர்ஜிக்கு வலுவான எதிர்ப்பாளராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். சட்டவிரோத ஊடுருவலை ஊக்குவிக்கிறார் மம்தா என்பது சுவேந்துவின் தொடர் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது.
மம்தா பானர்ஜியுடன் மருமகன் அபிஷேக் பானர்ஜி
மேற்கு வங்கத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி அலைகள் நிலவுவதாக அடுக்கடுக்காக விமர்சனங்களை பாஜக முன்வைத்தாலும் கூட மம்தா பானர்ஜி எஸ்ஐஆர் (வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்) பணிகள் ஆரம்பித்தபோதே சாட்டையை சுழற்ற ஆரம்பித்துவிட்டார். அவர் அடுக்கிய குற்றச்சாட்டுகளை உறுதிசெய்வது போலவே, மாநிலத்தில் முந்தைய தேர்தலில் 7.66 கோடியாக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை, இந்தமுறை 7.04 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது 62 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது. எஸ்ஐஆர் பணிகள் ஆரம்பித்தபோது முன்வைத்த எதிர்ப்பின் வீரியம் இன்றளவும் கொஞ்சமும் நீர்த்துப்போகாமல் பார்த்துக் கொண்டுள்ளார் மம்தா.
அது மட்டுமல்லாது, திரிணமூல் காங்கிரஸில் யாரையெல்லாம் முன்வைத்து பாஜக விமர்சனங்களை அடுக்கியதோ, அவர்களையெல்லாம் குறிப்பெடுத்து வைத்தார்போல், இந்த முறை 74 சிட்டிங் எம்எல்ஏக்களை சீட் தராமல் புறக்கணித்துள்ளார் மம்தா பானர்ஜி. இது அவர் எடுத்துள்ள டேமேஜ் கன்ட்ரோல் நடவடிக்கை என்கின்றனர் தேர்தல் அரசியல் நிபுணர்கள்.
மம்தா பானர்ஜிக்கு முஸ்லிம் சிறுபான்மையினரின் ஆதரவு வலுவாகவே இருக்கிறது என்பது கள நிலவரக் கருத்தாக உள்ளது. இருப்பினும் மாநிலத்தின் உயர் சாதி இந்துக்களும், பட்டியல், பழங்குடி சமூகத்தினரும் திரிணமூல் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மாநிலத்தில் வேலை வாய்ப்பின்மை பிரச்சினை, பெண்கள் பாதுகாப்பு விவகாரம் ஆகியன இந்தத் தேர்தலில் மம்தாவுக்கு பாதகமாக எதிரொலிக்கும் என்றே கூறப்படுகிறது.
மேற்கு வங்க அரசியல் களம் சாதி ரீதியில் கட்டமைக்கப்பட்டது இல்லை என்றாலும் கூட, மாநிலத்தில் இந்தியாவிலேயே 2-வது பெரிய அளவில் பட்டியல் சமூகத்தினர் வசிக்கின்றனர் என்பது கருத்தில் கொள்ள வேண்டியது. மாநில மக்கள் தொகையில் 23.51% பட்டியல் சமூகம், 5.8% பழங்குடிகள் என்கின்றன புள்ளிவிவரங்கள். இவர்களை தங்கள் பக்கம் கவர்ந்துதான் பாஜக கடந்த 2021 தேர்தலில் 77 இடங்களை வசமாக்கியது என்றும் கூறப்படுகிறது.
மேற்கு வங்க பட்டியல் சமூகத்தினரும் பாஜகவுக்கு பெருகும் ஆதரவும்!
மம்தா பானர்ஜி சிறுபான்மையினரை சமாதானப்படுத்தும் அரசியலைச் செய்கிறார். சட்டவிரோத குடியேறிகள் (வங்கதேச ஊடுருவல்காரர்களால்) மேற்கு வங்கத்தில் வேலை வாய்ப்பு பறிபோகிறது, ‘லவ் ஜிஹாத்’ நடக்கிறது, அதனால் சாதிகளுக்கு அப்பாற்பட்டு இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதே பாஜகவின் பிரச்சாரமாக உள்ளது.
இது ஓரளவு அங்கு எடுபட்டும் இருக்கிறது. இந்தத் தேர்தலில் மேற்கு வங்கத்தின் மிக முக்கியமான மாத்துவா பட்டியல் சமூகத்தின் நன்நம்பிக்கையைப் பெற்றால் மட்டுமே 2021-ல் இழந்த தொகுதிகளை மம்தா வென்றெடுக்க முடியும் என்று கணிக்கப்படுகிறது. ஆனால், மத்துவாக்கள் பலரும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழங்கி தங்கள் வாக்கு யாருக்கு என்பதை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பாஜகவின் சவால்கள் என்னென்ன?
மம்தாவின் பலம், பலவீனம் அலசிய நிலையிலும், அவருக்கு பாஜக மட்டுமே போட்டி என்று தெளிவாக மீண்டும் உறுதியான நிலையிலும், அந்தப் போட்டியில் வெல்ல பாஜக முன் சில சவால்கள் இருக்கின்றன.
அது முந்தைய தேர்தலில் இருந்து கற்றுக் கொள்ளும் பாடமாகவும் இருக்கலாம். கடந்த முறை, மம்தா vs பாஜக என்ற பாணியில் பிரச்சாரங்களை முன்னெடுத்த பாஜக இந்த முறை அந்தப் புள்ளியை பாஜக vs திரிணமூல் ஆட்சியின் அவலங்கள் என்று திருப்ப வேண்டும் என்று அம்மாநில அரசியல் நோக்கர்களும், பாஜக அனுதாபிகளும் கூறுகின்றனர்.
அண்மையில் கொல்கத்தாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் பாஜக தொண்டர்கள்.
மேற்கு வங்கத்தின் சாமானியர்கள் திரிணமூல் மீது மிகப் பெரிய விமர்சனமாக முன்வைப்பது, திரிணமூல் கட்சியில் அதிகாரம் படைத்தவர்கள் மத்தியில் நிலவும் பணப் பறிப்பு போக்கும், அரசு அங்கங்களின் நிலவும் ஊழலும். இதை முன்வைத்து ஏற்கெனவே மாநில அரசை “tolamul” அரசு (வங்க மொழியில் லஞ்ச வசூல் அரசு) என்ற விமர்சனங்கள் பாஜகவால் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அதை வலுப்படுத்துவதே கடந்த முறை 77 என்பதை இந்த முறை 120+ வரை பெற்றுத்தர வாய்ப்பை உருவாக்கும் என்று கணிக்கிப்படுகிறது.
இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு மிகப் பெரிய சவாலாக சொல்லப்படுவது, மாநிலத்தில் கட்சிக்குள் நிலவும் பூசல்கள். உட்கட்சிப் பூசல்களால் அமைப்பு ரீதியாக பாஜக உடைந்து கிடக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
மேற்கு வங்க பாஜகவுக்கு ஓர் அழுத்தமான, மம்தாவின் ‘நெருப்பு தெறிக்கும்’ ஆளுமைக்கு ஈடு கொடுக்கும் தலைமை வேண்டும், மேலும் மேற்கு வங்க மாநிலத்தின் பிரத்யேகமான கலாச்சாரத்தை புரிந்து கொண்டு பாஜக நடக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் சிஎன்என் நியூஸ் 18 கருத்துக் கணிப்பில், 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 184 முதல் 194 வரை எளிதில் வென்றுவிடும். கிட்டத்தட்ட திரிணமூலுக்கு இது ‘க்ளியர் ஸ்வீப்’ என்று கூறுகிறது. பாஜக 98 முதல் 108 சீட் வரை வெற்றி கிட்டும் என்றும் அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
மேற்கு வங்க தேர்தல் என்றாலே, உள்ளாட்சி தொடங்கி நாடாளுமன்ற வாக்குப் பதிவு வரை வன்முறைச் சம்பவங்கள் இன்றளவும் தடுக்க முடியாதவையாக இருக்கின்றன. கருத்துக் கணிப்புகள் 4-வது முறையாக மம்தா ஆட்சிக்கு வாய்ப்பு என்று சொல்லும் சூழலில் வன்முறைச் சம்பவங்கள் பற்றி மாநில அரசு முன்கூட்டியே கணித்து கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பூவா, தலையா என்பது நாணயத்தை சுண்டிவிட்டால் தான் தெரியும் என்பதுபோல், இரு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மேற்கு வங்க தேர்தல் முடிவு மே.4-ல் வெளியாகும் போது திரிணமூல் vs பாஜக போட்டியில் வெற்றி யார் பக்கம் என்பதை உணர்த்தும்.