காங்கிரஸை ஒதுக்கிவிட்டு ஆலோசனைக் கூட்டம்… - புதுச்சேரிக்கு புதுக் கணக்குப் போடுகிறதா திமுக?

புதுச்சேரி திமுக அலுவலகத்தில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விசிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். | படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி திமுக அலுவலகத்தில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விசிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். | படம்: எம்.சாம்ராஜ்

Updated on
2 min read

விஜய்யின் வருகையால், அதிகாரத்தில் பங்கு கேட்டு திமுக-வுடன் முரண்டு பிடிக்கிறது தமிழக காங்கிரஸ். ஆனால், “ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறது தமிழக திமுக.

இதனால், தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இதேபோல், புதுச்சேரியிலும் இண்டியா கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது என்பதிலேயே திமுக-வுக்கும் காங்கிரஸுக்கும் முட்டல் மோதல் அதிகரித்து வருகிறது. இரண்டு கட்சிகளுமே தங்கள் தலைமையில் தான் கூட்டணி எனச் சொல்லி வரும் நிலையில், நேற்று புதுச்சேரி திமுக தலைமை அலுவலகத்தில் திமுக கொள்கை பரப்புச்செயலாளர் ஜெகத்ரட்சகனும் மாநில திமுக அமைப்பாளர் சிவாவும் இண்டியா கூட்டணிக் கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, விசிக ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்துக்கு காங்கிரஸை அழைக்கவில்லை. இதில் கலந்து கொண்ட கட்சிகளின் பொறுப்பாளர்களை தனித்தனியே அழைத்து கருத்துகளைக் கேட்டார் ஜெகத்ரட்சகன். இந்தப் பேச்சுவார்த்தையின் போது விசிக 3 தொகுதிகளையும், இந்திய கம்யூனிஸ்ட் 4, மார்க்சிஸ்ட் 2 தொகுதி களையும் தங்களுக்காக கேட்டதாகச் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சலீம், "திமுக அழைப்பின் பேரில் வந்தோம். ஏற்கெனவே நாங்களும் திமுக-வும் இருமுறை கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஆட்சி அமைத்துள்ளோம். இம்முறை 4 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளோம்" என்றார். மார்க்சிஸ்ட் கட்சி ஒருங்கிணைப்பாளர் பெருமாளிடம் கேட்டதற்கு, "திமுக அழைப்பின் பேரில் வந்து பேசினோம். எங்களுக்கு 2 தொகுதிகளைக் கேட்டிருக்கிறோம்" என்றார்.

இதனிடையே, கடந்த முறை புதுவையில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் ஏற்கெனவே திமுக தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டது. அங்கு அறிவிக்கப்படாத வேட்பாளர்கள் களமிறங்கி களத்தைக் கலக்கி வருகிறார்கள். இந்த நிலையில், தங்களை அழைக்காமல் திமுக மற்ற கட்சிகளை அழைத்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி இருப்பது புதுச்சேரி காங்கிரஸாரை அதிரவைத்துள்ளது.

இதுபற்றி ஜெகத்ரட்சகனிடம் கேட்டதற்கு, “புதுச்சேரிக்கான தேர்தல் பொறுப்பாளராக தலைமை என்னை நியமித்துள்ளது. அதன்படி பிற கட்சி நிர்வாகிகளைச் சந்தித்தேன். காங்கிரஸ் நிர்வாகிகளையும் சந்திப்பேன். புதுச்சேரிக்கு இண்டியா கூட்டணிக்கு தலைமை வகிப்பது யார் என்பதை கட்சித் தலைமை தான் முடிவு செய்யும். போட்டியிடும் தொகுதிகளையும் தலைமைதான் முடிவு செய்யும்” என்றார்.

தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி பஞ்சாயத்து தீராத பஞ்சாயத்தாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், புதுவையிலும் காங்கிரஸை தவிர்த்துவிட்டு திமுக தனியாக கூட்டணிக் கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தி இருப்பது யதார்த்தமாக நடந்ததா அல்லது எதற்கும் தயாராக இருக்கிறோம் என்பதைச் சொல்வதற்காகவா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

<div class="paragraphs"><p>புதுச்சேரி திமுக அலுவலகத்தில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விசிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். | படம்: எம்.சாம்ராஜ்</p></div>
“ஆட்சி சரியில்லையே தவிர ஸ்டாலினுக்கு நான் நண்பன்தான்” - நயினார் நாகேந்திரன் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in