

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
முதல்வர் ஸ்டாலினுக்கு நான் எதிரி அல்ல, நண்பன்தான். ஆட்சி நிர்வாகம் சரியில்லை என்றுதான் சொல்கிறோம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சென்னையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இன்று வீதியில் இறங்கிப் போராடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, தனது தேர்தல் வாக்குறுதி 313-ல் இவர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார். ஆனால், ஆட்சியில் அமர்ந்ததும் சொன்னதைச் செய்வது கிடையாது என்பது திமுகவின் வாடிக்கையாகிவிட்டது.
உடனடியாக வாக்குறுதி 313-ஐ நிறைவேற்ற வேண்டும். வெகு விரைவில் தமிழகத்தில் என்டிஏ ஆட்சி மலரும். இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தனது தந்தையின் உடல்நிலையைக் கவனிக்கவே தற்காலிகமாகப் பொறுப்பில் இருந்து விலகுவதாகத் தெரிவித்தார். ஆனால், அவர் அதிருப்தியில் விலகுவதாக ஊடகங்கள் திட்டமிட்டுப் பரப்பும் பொய்ப் பிரசாரங்கள் கண்டிக்கத்தக்கவை.
மத்திய நிதியமைச்சரின் பட்ஜெட் தமிழகத்துக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. சென்னை - பெங்களூர் மற்றும் சென்னை - ஐதராபாத் என இரு வழித்தடங்களில் அதிவேக புல்லட் ரயில்கள். தென் தமிழகத் தென்னை விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழக அரசின் நிர்வாகமோ சீர்குலைந்து கிடக்கிறது. நெல்லை மாவட்டக் கனிம வளங்கள் கேரளாவுக்குக் கடத்தப்படுகின்றன. பதிலுக்கு அங்கிருந்து மருத்துவக் கழிவுகள் தமிழகத்துக்குள் கொட்டப்படுகின்றன. 11-ம் வகுப்பு மாணவன் கையில் கஞ்சா புழங்கும் அளவுக்குச் சீரழிவு. வடமாநிலத் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லை.
விஜய்க்கு மீண்டும் அழைப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு நான் எதிரி அல்ல, ஒரு நண்பன் தான். அவரது ஆட்சி, நிர்வாகம் சரியில்லை என்று தான் சொல்கிறோம். இன்று தமிழக மக்களே இந்த ஆட்சிக்கு எதிராக மாறிவிட்டனர். திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என்றும், என்.டி.ஏ. கூட்டணி வலுபெறும் என்றும் நான் மூன்று மாதங்களுக்கு முன்பே சொன்னது இப்போது பலிக்கத் தொடங்கியுள்ளது. எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி. அதனால், எங்கள் கூட்டணியில் விஜய் சேருவது முக்கியமா இல்லையா என்பது இரண்டாது விஷயம். கூட்டணிக்கு அவர் வந்தால் அவருக்கும் நல்லது, தமிழகத்துக்கும் நல்லது என்றார்.