

சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவை தொகுதி. குறிஞ்சிப்பாடி தொகுதியில் வடலூர் நகராட்சி மற்றும் குறிஞ்சிப்பாடி சிறப்பு நிலை பேரூராட்சி, குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தின் 51 ஊராட்சிகள் மற்றும் கடலூர் ஊராட்சி ஒன்றியத்தின் 20 ஊராட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இத்தொகுதியில் குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன் கோயில் மற்றும் சுப்புராயர் கோயில், வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை, திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் என பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன.
இப்பகுதியில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி ஆகியவை உள்ளன. விவசாயம், நெசவு மற்றும் மீன்பிடி தொழில் பிரதானமாக விளக்கி வருகிறது. வன்னியர், ஆதிதிராவிடர்கள், ரெட்டியார்கள், முதலியார்கள், நாயுடு மற்றும் இதர சமூகத்தினரும் உள்ளனர்.
இங்கு வெற்றி பெற்றவர்கள்
1962-ல் என். ராஜாங்கம் (திமுக), 1967-ல் என். ராஜாங்கம் (திமுக), 1971-ல் என். ராஜாங்கம் (திமுக), 1977-ல் எம்.செல்வராஜ் (திமுக), 1980-ல் ஏ. தங்கராசு (அதிமுக), 1984-ல் ஏ. தங்கராசு (அதிமுக), 1989-ல் நா. கணேசமூர்த்தி (திமுக), 1991-ல் கு. சிவசுப்பிரமணியன், 1996-ல் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் (திமுக), 2001-ல் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் (திமுக), 2006-ல் எம்ஆர்கே. பன்னீர் செல்வம் (திமுக), 2011-ல் ஆர். ராஜேந்திரன் (அதிமுக), 2016-ல் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் (திமுக), 2021-ல் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் (திமுக).
தற்போது இந்த தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் புவனேந்திரன், நாதக சார்பில் கவிதா ரெங்கநாதன், தவெக சார்பில் ராஜ்குமார் உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மக்களின் எதிர்பார்ப்புகள்
வடலூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும். பெருமாள் ஏரியும், அதன் பாசன வாய்க்கால்களும் முழுவதுமாக தூர்வார வேண்டும். வாலாஜா ஏரியும் தூர்வாரப்பட வேண்டும். நலிவடைந்துள்ள நெசவுத் தொழில் மேம்படுத்தப்படவில்லை. சிப்காட்டால் ஏற்படும் பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை.
வடலூரில் உள்ள சிட்கோவளாகம் மேம்படுத்தப்பட வேண்டும். வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் முழுவதுமாக நிறைவேற்றப்படவில்லை. அரசு வேளாண் கல்லூரிகொண்டு வர வேண்டும் ஆகிய எதிர்பார்ப்புகள் நீண்ட காலமாக தொகுதி மக்களிடம் உள்ளது. திமுக வேட்பாளரும், அமைச்சருமான எம்ஆர்கே.பன்னீர்செல்வம் திமுக அரசின் சாதனைகள், திமுக தேர்தல் அறிக்கை மற்றும் அவர் தொகுதிக்கு செய்த திட்டப்பணிகளை கூறிகூட்டணி கட்சியினருடன் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறார்.
அதிமுக வேட்பாளர் புவனேந்திரன் அதிமுக அரசின் திட்டங்களையும், அதிமுக தேர்தல் அறிக்கையையும் கூறி கூட்டணிக் கட்சியினருடன் சுழன்று பணியாற்றி வருகிறார். நாதக வேட்பாளர் கவிதா ரெங்கநாதன் கட்சி தேர்தல் அறிக்கையில் உள்ள சிறப்பு அம்சங்களை எடுத்துக் கூறி தனியாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
தவெக வேட்பாளர் ராஜ்குமார் இளைஞர்கள் புடை சூழவேக, வேகமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதில் வெற்றி வாகை சூடப் போவது யார் என்பதை நாளை மறுநாள் வாக்காளர்கள் முடிவு செய்கிறார்கள்.
வாக்காளர்கள் விவரம்
ஆண்கள் - 1,16,838
பெண்கள் - 1,21,305
மூன்றாம் பாலினத்தவர் - 46
மொத்தம் - 2,38,189