தேமுதிகவின் 26ம் ஆண்டு கொடி நாள்: தொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் கடிதம்

தேமுதிகவின் 26ம் ஆண்டு கொடி நாள்: தொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் கடிதம்
Updated on
1 min read

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக வெற்றி பெற உண்மை, உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று தொண்டர்களுக்கு கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”தேமுதிகவின் உயிரினும் மேலான என் அன்பு கழக உடன் பிறப்புகளே, பிப்ரவரி 12ம் தேதி நடைபெறும் தேமுதிகவின் 26ம் ஆண்டு கொடி நாளை, அனைத்து கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

2000ம் ஆண்டு நமது தலைவர் விஜயகாந்தால் அறிமுகப் படுத்தப்பட்ட மூவர்ணக் கொடி, சமதர்மம், சமூக நீதி, சனாதனம், சமசிந்தனை மற்றும் சம உரிமை ஆகிய கழகக் கொள்கைகளை உலகிற்கு எடுத்துச் சொல்லும் சின்னமாக விளங்குகிறது. அனைத்து மாவட்டம் பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர், ஊராட்சி மற்றும் கிராமப்புற கிளைகளில் பழைய கொடிகளை அகற்றி புதிய கழகக் கொடிகளை ஏற்றி, கொடி இல்லாத இடங்களில் புதிய கொடிகளை அமைக்க வேண்டும்.

“இயன்றதை செய்வோம்! இல்லாதவர்க்கே!!" என்ற தலைவரின் கோட்பாட்டின்படி, மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை வழங்க வேண்டும். மேலும், கொடி நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி, பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை அதிகளவில் கழக உறுப்பினர்களாக இணைக்க வேண்டும்.

விஜயகாந்த் புகழ் ஓங்கவும், தேமுதிக புகழ் நிலைத்து நிற்கவும், இந்த கொடி நாளில், நமது கழகக் கொடியை தமிழகம் முழுவதும் பட்டொளி வீசி பறக்கவைத்து, நமது முரசு எட்டு திக்கும் வெற்றி முரசாக ஒலிக்கச் செய்வோம்.

2026 சட்டமன்றத் தேர்தலில் நமது கழகம் மாபெரும் வெற்றி பெற வேண்டி, உண்மை, உழைப்பு, அர்ப்பணிப்பு, விசுவாசம், கண்ணியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைந்து செயல்படுவோம். இந்த தேர்தலில் வெற்றி பெற்று, நமது இயக்கம் ஒரு அசைக்க முடியாத சக்தி என்பதை நம் உழைப்பின் மூலம் நிரூபிக்க உறுதிமொழி ஏற்றுக் கொள்வோம்” என்று கூறியுள்ளார்.

தேமுதிகவின் 26ம் ஆண்டு கொடி நாள்: தொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் கடிதம்
அரசுப் பணியாளர் தேர்வு ரத்து: தேவை நிரந்தரத் தீர்வு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in