

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தவிருந்த தொகுதி-2, தொகுதி-2ஏ முதன்மைத் தேர்வு கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்ட நிகழ்வு மிகுந்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. தேர்வாணையத்தின் வரலாற்றில் இதுவரை நடந்திராத இந்நிகழ்வுக்கான காரணிகள் கண்டறியப்பட்டு எல்லா மட்டங்களிலும் குறைகள் அகற்றப்பட வேண்டும்.
தமிழகத்தின் பல்வேறு மையங்களில் பிப்ரவரி 8 அன்று முற்பகலில் தொகுதி-2ஏ, முதன்மைத்தேர்வுக்கான பொது அறிவுத் தேர்வும் பிற்பகலில் தொகுதி-2, தொகுதி-2ஏ முதன்மைத்தேர்வுக்கான தமிழ்மொழித் தகுதித்தேர்வும் நடத்தப்பட இருந்தன.
மொத்தம் 828 பணியிடங்களுக்குத் தொகுதி-2 தேர்வை 1,126 பேரும் தொகுதி-2 ஏ தேர்வை 9,457 பேரும் எழுத இருந்தனர். மொத்தம் 38 தேர்வு மையங்களில் சென்னையில் அரும்பாக்கம், நந்தனம், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.
சென்னையைச் சேர்ந்த பல தேர்வர்களுக்குத் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் (ஹால் டிக்கெட்) ஒரு மையம் குறிப்பிடப்பட்டிருக்க, வேறொரு மையத்தில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.