

காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல், சமூக நலத்துறை அமைச்சர் வி.பி.சிவக்கொழுந்து தலைமையில் நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோர்.
படம்: வீ. தமிழன்பன்
காரைக்கால்: புதுச்சேரி மாநிலத்தில் 3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி தொகுப்பு வழங்கப்படும் என அமைச்சர் வி.பி.சிவக் கொழுந்து தெரிவித்துள்ளார்.
காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் வி.பி.சிவக்கொழுந்து தலைமையில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டம் நேற்று நடை பெற்றது.
இதில், புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ராஜசேகரன், எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச்.நாஜிம், எம்எல்ஏக்கள் மீனாட்சிசுந்தரம், வி.விக்னேஸ்வரன், சமூக நலத்துறை இயக்குநர் பி.ராகிணி மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதில், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எம்எல்ஏக்கள் பேசியது: துறைகளில் நிலவும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஈமச்சடங்குக்கான நிதி உதவி கோரிய 157 விண்ணப்பங்களுக்கு இன்னும் நிதி வழங்கப்படாமல் உள்ளது.
முதியோர் உதவித்தொகை கோரி வரும் விண்ணப்பங்களை, துறை அதிகாரிகள் சீனியாரிட்டி அடிப்படையில் மட்டும் பரிசீலிக்காமல், பரிந்துரைத்து அனுப்பும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினர்.
பின்னர் அமைச்சர் வி.பி.சிவக் கொழுந்து செய்தியாளர்களிடம் கூறியது: புதுச்சேரி மாநிலத்தில் இன்னும் ஒரு மாத காலத்தில் ரேஷன் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு, முழுமையாக செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலத்தில் சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட 3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.690 மதிப்பிலான தீபாவளி பண்டிகைக்கான தொகுப்பு வழங்கப்படும்.
இதில் சர்க்கரை, சூரியகாந்தி எண்ணெய் தலா 2 கிலோ, ஒரு கிலோ கடலை பருப்பு, தலா அரை கிலோ மைதா, ரவை ஆகிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுச்சேரியிலேயே மாப்பிள்ளை பார்த்து கொடுங்க…
கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் பேசும்போது, “காரைக்காலைச் சேர்ந்த பெண்ணை அருகில் உள்ள நாகை, மயிலாடுதுறை போன்ற தமிழக பகுதிகளைச் சேர்ந்த மணமகனுக்கு திருமணம் செய்து கொடுப்பது வழக்கம்.
அந்தப் பெண் மகப்பேறுக்காக இங்கு வருகிறார். ஆனால் அவருக்கு பிறக்கும் பெண் குழந்தைக்கு முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திலான ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகை வழங்கப்படாது என்பது எவ்வகையில் நியாயம்? அப்படியெனில் நீங்கள் புதுச்சேரியிலேயே மாப்பிள்ளை பார்த்துக் கொடுங்கள்” என்று கூறியதால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
தொடர்ந்து வேறு ஒரு கோரிக்கை தொடர்பாக நாஜிம் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது, “நீ எது சொன்னாலும் முதல்வர் ஏற்றுக்கொள்கிறார். பின்னர் ஏன் அதிகாரிகளை வறுத்தெடுக்கிறாய்?” என சிரித்துக்கொண்டே அமைச்சர் தெரிவித்ததால், சிரிப்பலை எழுந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவக்கொழுந்து பேசும் போது, “பெண் குழந்தைக்கான வைப்புத் தொகை தொடர்பான கோரிக்கை நியாயமான கருத்துதான், இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, தீர்வுகாண பரிசீலிக்கப்படும்” என்றார்.