தருமபுரி அருகே சடலத்துடன் மக்கள் போராட்டம் - மயான பாதையை மீட்டுத்தர கோரிக்கை

தருமபுரி அருகே சடலத்துடன் மக்கள் போராட்டம் - மயான பாதையை மீட்டுத்தர கோரிக்கை
Updated on
1 min read

தருமபுரி: மயானத்துக்குச் செல்லும் பாதையை மீட்டுத்தரக் கோரி அரூர் அடுத்த டி.அம்மாபேட்டை பகுதியில், உயிரிழந்த முதியவரின் உடலை அடக்கம் செய்யாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் டி.அம்மாபேட்டையில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த தனி நபர் மற்றும் அவரது மருமகள் பெயர்களுக்கு கடந்த 1982 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலம், கிராம சுடுகாட்டுக்குச் செல்லும் பொது பாதையில் இருப்பதால், சடலங்களை மயானத்திற்கு கொண்டு செல்வதில் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், 75 வயதான வேடியப்பன் என்பவர் நேற்று உயிரிழந்த நிலையில், பொது பாதை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை அவரது உடலை அடக்கம் செய்யமாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்து நேற்று வந்த கோட்டப்பட்டி போலீஸார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுவழிப்பாதையை சர்வே செய்து, பாதை இருப்பது உறுதி செய்யப்பட்டால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தனர்.

ஆனால், இதை ஏற்க மறுத்த பொதுமக்கள், நிரந்தர தீர்வு கிடைத்தால் மட்டுமே உடலை அடக்கம் செய்வோம் எனவும், கிடைக்காத பட்சத்தில் வருவாய் துறை சார்பில் பொதுப் பாதையில் பட்டா கொடுக்கப்பட்ட இடத்திலேயே 5 அடியில் குழி தோண்டி வைத்திருப்பதாகவும், நடவடிக்கை இல்லையென்றால் அங்கே சடலத்தை புதைத்து விடுவோம் என அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

தொடர்ந்து இன்று பிற்பகல் வரை சடலத்தை கொண்டு செல்லாமல் வைத்திருந்தனர். அவர்களிடம் தொடர்ந்து வருவாய்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி அருகே சடலத்துடன் மக்கள் போராட்டம் - மயான பாதையை மீட்டுத்தர கோரிக்கை
கடலூர் சிப்காட், என்எல்சிக்காக கூடுதல் நிலங்களை கையகப்படுத்த அன்புமணி எதிர்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in