

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் வயது மற்றும் வழக்கு விவரங்கள் முரணாக இருந்ததால், அவற்றில் திருத்தம் செய்ய கோரி அக்கட்சியின் வழக்கறிஞர்கள் குழுவினர் தேர்தல் அதிகாரியிடம் நேற்று மனு அளித்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். இதற்காகப் பெரம்பூர் தொகுதியில் கடந்த மார்ச் 30-ஆம் தேதியும், திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப்ரல் 2-ஆம் தேதியும் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். விஜய் தாக்கல் செய்த இரண்டு வேட்பு மனுக்களிலும் வெவ்வேறு தகவல்கள் இடம்பெற்றிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த மனுவில், தன் மீது எந்தக் குற்ற வழக்குகளும் நிலுவையில் இல்லை என விஜய் குறிப்பிட்டிருந்தார். ஆனால், திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த மனுவில், தன் மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இதுமட்டுமன்றி, இரண்டு வேட்புமனுக்களிலும் குறிப்பிடப்பட்டிருந்த விஜய்யின் வயதும் ஒன்றுக்கொன்று முரணாக இருந்ததாகத் தகவல் வெளியானது. இவ்வாறு முக்கியமான விவரங்களில் மாறுபட்ட தகவல்கள் இருப்பதால், பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஏப்ரல் 6-ஆம் தேதி வரை காலக்கெடு உள்ளது. எனவே, ஏற்கெனவே தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் உள்ள பிழைகளைத் திருத்தம் செய்யதவெக சார்பில் நேற்று விண்ணப்பிக்கப்பட்டது. நேற்று புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்ததால் விஜய் நேரில் வர இயலவில்லை. அவருக்குப் பதிலாக, தவெக வழக்கறிஞர்கள் குழுவினர் பெரம்பூர் தேர்தல் பதிவு அதிகாரி புனித வள்ளியிடம் இதற்கான மனுவைச் சமர்ப்பித்தனர்.