விசிக - பாமக நேரடிப் போட்டி: காட்டுமன்னார்கோவில் தொகுதியை தனதாக்கப் போவது யார்?

விசிக - பாமக நேரடிப் போட்டி: காட்டுமன்னார்கோவில் தொகுதியை தனதாக்கப் போவது யார்?
Updated on
2 min read

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி மிகவும் பின்தங்கிய தொகுதியாகும். பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதி. விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். இங்கு எந்தவிதமான தொழிற்சாலைகளும் இல்லை. பிரதான தொழிலான விவசாயத்தை நம்பியே இத்தொகுதி மக்கள் உள்ளனர்.

கிழக்கு, தெற்கு பகுதியில் நாகை மாவட்டமும், மேற்கு பகுதியில் அரியலூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களையும், வடக்கே புவனகிரி தொகுதியையும் எல்லையாக கொண்டு மாவட்டத்தின் கடைகோடி தொகுதியாக உள்ளது.

சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் மாவட்டத்தின் மிகப் பெரிய நீராதராமான வீராணம் ஏரி, காட்டுமன்னார்கோவில் வீரநாராயண பெருமாள் கோயில், அனந்தீஸ்வரன் கோயில், மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ் வரர் கோயில், திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் கோயில், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோயில் ஆகிய புகழ் மிக்க கோயில்கள் அடங்கிய தொகுதியாகவும் திகழ்கிறது.

மேலும் ஆதிதிராவிடர் சமுதாயத்தினர் அதிகம் வசிக்கின்றனர். வன்னியர் 2-வது இடத்தில் உள்ளனர். முதலியார், செட்டியர், யாதவர் இதர சமூகத்தைச் சேர்ந்தவர்களும் குறைந்தளவில் உள்ளனர். முஸ்லிம்கள் மிகவும் குறைந்த அளவில் உள்ளனர். சீரமைக்கப்பட்ட இத்தொகுதியில் சிதம்பரம் தொகுதியில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி சேர்க்கப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் இருந்து அண்ணாமலைநகர் பேரூராட்சி மற்றும் குமராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 4 ஊராட்சிகள் சிதம்பரம் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தற்போது ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி, காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி, லால்பேட்டை பேரூராட்சி, கீரப்பாளையம் ஒன்றியத்தின் ஒரு பகுதி, காட்டுமன்னார்கோவில் ஒன்றியம், குமராட்சி ஒன்றியம் ஆகியவற்றை உள்ளடக்கி காட்டு மன்னார்கோவில் சட்டப்பேரவை தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பாதிப்பு அடைந்த கிராமங்களை உள்ளடக்கிய தொகுதியாகவும் திகழ்கிறது.

1962 எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி (திமுக), 1967 எஸ்.சிவசுப்பிரமணியன் (இந்திய தேசிய காங்கிரஸ்), 1971 எஸ்.பெருமாள் (திமுக), 1977 மருதூர் ராமலிங்கம் (திமுக), 1980 மருதூர் ராமலிங்கம் (திமுக), 1984 எஸ்.ஜெயசந்திரன் (இந்திய தேசிய காங்கிரஸ்), 1989 ஏ.தங்கராசு (இந்திய மனிதஉரிமை கட்சி), 1991 ராஜேந்திரன் (இந்திய மனித உரிமை கட்சி), 1996 மருதூர் இராமலிங்கம் (திமுக), 2001 டாக்டர் ப.வள்ளல் பெருமான் (காங்கிரஸ் ஜனநாயகபேரவை), 2006 துரை.ரவிக்குமார் (விசிக), 2011 என்.முருகுமாறன் (அதிமுக), 2016 என்.முருகுமாறன் (அதிமுக), 2021 ம.சிந்தனைசெல்வன் (விசிக) ஆகியோர் இதுவரை வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த தொகுதியில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விசிக சார்பில் ஜோதிமணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் பல் மருத்துவர் அன்பு சோழன், நாதக சார்பில் சிவஜோதி, தவெக சார்பில் சீனுவாசன் மற்றும் 7 பேர் என 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சிதம்பரம் - காட்டுமன்னார் கோவில் வழி - அரியலூர் ரயில் பாதை கொண்டு வர வேண்டும். வீராணம் ஏரியை முழுமையாக தூர்வார வேண்டும். நிரந்தர வெள்ளத்தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் கரையை பலப்படுத்த வேண்டும். விவசாயத்துக்கு சரியான பாதுகாப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என்பவை தொகுதியின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

தற்போது இந்த தொகுதியில் விசிக - பாமக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. விசிகவுக்கு சாதகமான தொகுதி என்று கூறப்படும் இந்தத் தொகுதியை கைப்பற்ற அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.

இந்த தொகுதியை கைப்பற்றியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் பாமக, பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிரமாக தேர்தல் வியூகம் அமைத்து பணியாற்றி வருகின்றனர்.

வாக்காளர்கள் விவரம்

  • ஆண் - 1,12,479

  • பெண் - 1,13,844

  • மூன்றாம் பாலினத்தவர் - 10

  • மொத்த வாக்காளர்கள் - 2,26,333

விசிக - பாமக நேரடிப் போட்டி: காட்டுமன்னார்கோவில் தொகுதியை தனதாக்கப் போவது யார்?
தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in