

கடலூர்: ஆங்கிலேயர் காலத்தில் மாநிலத் தலைநகராக இருந்த பகுதி கடலூர். இங்குள்ள புனித டேவிட் கோட்டைக்கு தங்கள் மாகாணத் தலைநகரை மாற்றி, இந்தியாவின் தென் பிராந்தியத்தை இந்தக் கோட்டையில் இருந்து ஆண்டு வந்தனர் ஆங்கிலேயர்கள். அவர்கள் தங்கள் நாட்டுனான வாணிபத் தொடர்பு களுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியுள்ளனர்.
அப்போது தொழில் வளர்ச்சி ஏற் பட்டு, அதன்பின் நலிவுற்று, பின்னர் சிப்காட் பகுதியால் தொழில் வளர்ந்து, அதனால் மாசுபட்டு பலவாறான நெருக்கடிக்குள் ஒருவித வளர்ச்சியை எட்டியிருக்கிறது இந்த கடலூர் சட்டப்பேரவைத் தொகுதி.
திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில், வெள்ளி கடற்கரை இந்த தொகுதியில் உள்ளது. கடலூர் மாநகராட்சி பகுதி, கடலூர் துறைமுகம், மேலக்குப்பம், நல்லாத்தூர், தூக்கணாம்பாக்கம், தென்னம்பாக்கம், செல்லஞ் சேரி, புதுக்கடை, வடபுரம், கீழ்பாதி,கிளிஞ்சிக்குப்பட்ம், சிங்கிரிக்குடி, மதலப்பட்டு, கீழ் அழிஞ்சிப்பட்டு, நாகப்பனூர், மேல் அழிஞ்சிப்பட்டு, ஓடலப்பட்டு, கீழ் குமாரமங்கலம், காரணப்பட்டு, பள்ளிப்பட்டு, மலைபெருமாள் அகரம், உள்ளேரிப்பட்டு, கரைமேடு, திருப்பணாம் பாக்கம், களையூர், அழகியநத்தம், இரண்டாயிரவிளாகம், வெள்ளப் பாக்கம், மருதாடு, நத்தப்பட்டு, வெளிச்செம்மண்டலம், சின்னகங்கனாங் குப்பம், சுப உப்பலவாடி, குண்டு உப்பலவாடி, உச்சிமேடு, பெரியகங்கனாங் குப்பம், கோண்டூர், தோட்டப்பட்டு, செஞ்சிகுமாரபுரம், வரக்கால்பட்டு மற்றும் காராமணிக்குப்பம் கிராமங் கள், பாதிரிக்குப்பம் ஆகியவை இத் தொகுதிக்குள் உள்ளன.
தொகுதியில் வெற்றி பெற்றவர்கள்
1952 - ல் உருவான இத்தொகுதி, அப்போது இரட்டை உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியாக இருந்து, தமிழ்நாடு டோய்லர்ஸ் கட்சி சார்பில் சிவ சிதம்பர ராமசாமி படையாச்சி மற்றும் ரத்தினம் ஆகியோர் அப்போது வெற்றி பெற்றனர். 1957 மற்றும் 1962-ல் காங்கிரஸ் சார்பில் பி. ஆர். சீனிவாச படையாச்சி, 1967-ல் திமுக சார்பில் இரெ. இளம்வழுதி, 1971-ல் திமுக சார்பில் ஆர். கோவிந்தராஜன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
1977-ல் அதிமுக சார்பில் கி. அப்துல்லத்தீப் வெற்றி பெற்றார். 1984-ல் காங்கிரஸ் சார்பில் வி. கோ. செல்லப்பா, 1989-ல் திமுக சார்பில் இ. புகழேந்தி, 1991-ல் காங்கிரஸ் சார்பில் பி. ஆர். எஸ். வெங்கடேசன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பின்னர் 1996 மற்றும் 2001-ல் ஆகிய இரு தேர்தல்களிலும் திமுக சார்பில் இ.புகழேந்தி வெற்றி பெற்றார். 2006-ல் அதே திமுக சார்பில் கோ. ஐயப்பன் வெற்றி பெற்றார். அதன் பின் 2011 மற்றும் 2016- ல் அதிமுக சார்பில் எம். சி. சம்பத் தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்றார். 2021-ல் திமுக சார்பில் கோ. ஐயப்பன் வெற்றி பெற்றார்.
தற்போது களத்தில்..
தற்போது கடலூர் தொகுதியில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங் கிரஸ் வேட்பாளர் வழங்கறிஞர் சந்திர சேகரன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத், நாம் தமிழர் கட்சி சார்பில் சரசு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ராஜ்குமார் மற்றும் சிறுகட்சிகள், சுயேச்சைகள் என 11 வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 15 பேர் போட்டியிடுகின்றனர்.
கடலூர் மாநகரத்தின் மையப்பகுதி யில் தற்போதுள்ள பேருந்து நிலை யத்தையே சிறப்பாக விரிவுபடுத்தி மத்தியப் பேருந்து நிலையத்தை ஏற்படுத்த வேண்டும். கடலூரின் பாதுகாப்பான போக்குவரத்துக்கு கடலூரின் சாலைகளின் நீளம், அகலம் ஆகியவற்றை அதிகரிப்பதோடு செம்மண்டலம் பல்லடுக்கு மேம்பாலம், ஜவான்ஸ் பவனில் இருந்து கோஆப் டெக்ஸ் வரையிலான மேம்பாலம், முதுநகர் காவல் நிலையத்தில் இருந்து இரட்டை ரோடு வரையிலும் மேம்பாலம் ஏற் படுத்த நடவடிக்கை வேண்டும்.
மழைநீர் தேங்காமல் இருக்க ஒருங் கிணைந்த வடிகால் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். கடலூரில் தண்ணீர் பரிசோதனை நிலையம் அமைக்கப்பட வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பழுதடைந்த தண்ணீர் குழாய்களை மாற்றி பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட வேண்டும்.
கடலூர் விரிவடைந்த மாநகராட்சியில் முதல் கட்டத்தோடு நின்றுபோன புதைவட மின் திட்டம் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். மீனவர் குடியிருப்புகளை பாது காக்க, மீனவர்களின் படகுகளை பாது காக்க தூண்டில் வளைவு கடலூரில் அமைக்கப்பட வேண்டும்.
கெடிலம் ஆற்றில் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கழிவு நீர் விடுவதை தடுத்து இரண்டு ஆறுகளின் நீர் கடத்தும் திறனை அதிகப்படுத்த வேண்டும். இரண்டு ஆறுகளையும் குப்பைகளைக் கொட்டி சீரழிக்காமல் பாதுகாப்பான ஆறுகளாக மாற்ற வேண்டும். கடலூர் துறைமுகத்தில் பயணிகள் போக்குவரத்து சேவை தொடங்கப்பட வேண்டும்.
கடலூர் மாவட்டம் ஒரு இயற்கை பேரிடர் மாவட்டமாக இருப்பதால் கடலூரை இயற்கை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பெண்ணையாறு, கெடிலம் கரைகள் உயர்த்தப்பட்டு போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும். இரண்டு ஆறுகளின் முகத்துவாரங்கள் வெள்ளக்காலங் களில் தாராளமாக நீர் செல்வதற்கு ஏதுவாக நவீன முகத்துவாரம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இங்குள்ள அண்ணா ஸ்டேடியம் நவீனப்படுத்தப்பட்டு, நவீன தடகளம் அமைக்கப்பட்டு அனைத்து விளையாட் டுகளுக்கும் உள்ளரங்கம் கட்டப்பட்டு விளையாட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும். கடலூரில் ஒரு மருத்துவக் கல்லூரி, வேளாண் கல்லூரி, சட்டக்கல்லூரி ஆண்கள், பெண்கள் பாலிடெக் னிக் கொண்டு வர முயற்சிகள் எடுக்க வேண்டும்.
கடலூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் - புதுவை - சென்னை இடையிலான இருப்புப்பாதைத் திட்டத்தை உடனடியாக கொண்டு வரப் படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
கடலூர் மாநகராட்சியின் குப்பைகள் அப்புறப்படுத்த முடியாமல் எரிக்கப்படுகின்றன. உடனடியாக விரிவடைந்த கடலூர் மாநகராட்சிக்கு ஒருங்கிணைந்த குப்பை மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இதன்மூலம் நகரைத் தூய்மையாக வைக்க வேண்டும். கடலூர் மாநக ராட்சியின் குப்பைகளால் சுற்று வட்டார கிராமங்களும் பாதிக்கப்படுகின்றன. இதை சரி செய்ய வேண்டும் போன் றவை கடலூர் தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.
திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் திமுக அரசின் திட்டங்களையும், திமுகவின் தேர்தல் அறிக்கையையும் கூறி திமுக, கங்கிரஸ்
கூட்டணி கட்சியினருடன் வலம் வந்து தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் சுழன்று பணியாற்றி வாக்கு சேகரித்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சரசு, அக்கட்சியின் தேர்தல் அறிக்கை முக்கியமாக எடுத்துக் கொண்டு தேனீ போல சுறுசுறுப்புடன் செயல்பட்டு வாக்கு கேட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ராஜ்குமார் களத்துக்கு புதியவர் என்றாலும், விஜய்யை பிரதாமான முன்னிறுத்தி தொண்டர்களுடன் இணைந்து உற்சாகத்துடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
வேட்பாளர்கள் களத்தின் நின்று விறுவிறுப்புடன் களப்பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தரும் வாக்குறுதிகளை வாக்காளர்கள் பொறுமையுடன் உள்வாங்கி வருகின் றனர். கடலூரில் கால் பதிப்பது யார் என்பதை வரும் 23-ம் தேதி இங்குள்ள வாக்காளர்கள் தங்களின் வாக்குகளின் மூலம் முடிவு செய்ய உள்ளனர்.
வாக்காளர்கள் விவரம்
ஆண்கள் - 1,06,187
பெண்கள் - 1,16,882
மூன்றாம் பாலினத்தவர் - 80
மொத்தம் - 2,23,149