

சென்னை: பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், அரசியல் தலைவர்களின் பிரச்சாரத்தை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தமிழகம் முழுவதும் உள்ள மண்டல ஐஜி-க்கள், காவல் ஆணையர்கள், டிஐஜி-க்கள், எஸ்பிக்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது, தங்களது உயர் அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்.வெளியிலிருந்து வரும் தலையீடுகளை தவிர்க்க உத்தரவிட்டார். இதற்கிடையே, தேர்தல் பாது காப்பு தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியிள்ளதாகக் கூறப்படுகிறது.
அதில், நட்சத்திர அரசியல் தலைவர்களின் பரப்புரை, மக்கள் பாதுகாப்பு குறித்து முன்கூட்டியே திட்டமிட வேண்டும், சுவிதா இணையதளம் வாயிலாக பிரச்சாரத்துக்கு அனுமதி கேட்பவர்களுக்கு உரிய நேரத்தில் அனுமதி கிடைக்கிறதா என்பதை கண்காணித்து பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டத்துக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், வேட்பாளர்களின் பிரச்சாரங்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு பார்க்க வேண்டும்.
மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தகவல்களையும் உயர் போலீஸ் அதிகாரிகளின், வழிகாட்டுதலோடு தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும், தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்து ஆலோசனைக் கூட்டங்களிலும் தவறாது பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.