

சந்தீப் ராய் ரத்தோர்
சென்னை: நேரடி உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலை நேர்மையாக நடத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக போலீஸ் அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, தமிழக காவல்துறையில் சட்டம் - ஒழுங்கு டிஜிபி-யாக சந்தீப் ராய் ரத்தோர், தேர்தல் ஆணையத்தால் கடந்த வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார்.
அன்றைய தினம் இரவே பொறுப்பேற்றுக் கொண்ட சந்தீப் ராய் ரத்தோர், சட்டம் ஒழுங்கு மட்டும் அல்லாமல் தேர்தல் தொடர்புடைய பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.முதல் கட்டமாக வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, மண்டல ஐஜி-க்கள், டிஐஜி-க்கள், மாவட்ட எஸ்பி-க்கள் கலந்து கொண்டனர். அப்போது, அவர் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
குறிப்பாக, போலீஸ் அதிகாரிகள் தங்களுக்கு மேல் உள்ள அதிகாரிகளின் உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டும். படிநிலை முறையை மீறக்கூடாது. தேவையற்ற தலையீடுகளைத் தவிர்க்க வேண்டும். வெளியிலிருந்து எந்த அதிகாரியாவது கட்டளையிட்டால் அல்லது அறிவுறுத்தினால், அதுகுறித்து என்னிடம் தகவல் தெரிவிக்கவும் என கண்டிப்புடன் அறிவுறுத்தி உள்ளார். தேர்தல் நேரத்தில் எவ்வித அரசியல் தலையீடு மற்றும் அரசியல் சார்பின்றி பணியாற்ற வேண்டும் எனவும் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.