

சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம், காரைக்கால் மீனவர்கள் 30 பேர் சென்னை வந்தனர். தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள், அவர்களை வரவேற்று அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த 30 மீனவர்கள், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 3 விசைப்படகுகளில் பாம்பன் பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்களில் 21 மீனவர்கள்,தமிழகத்தின் ராமேசுவரம், 9 மீனவர்கள் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடலோர காவல்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி, 30 மீன
வர்களையும் கைது செய்தனர். அவர்களின் விசைப்படகுகள், மீன்பிடி வலைகள், பிடித்து வைத்திருந்த மீன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, இலங்கைக்கு கொண்டு சென்றனர். அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 30 பேரையும் சிறையில் அடைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு 30 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் நிபந்னையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து மீனவர்களை இந்தியாவுக்கு அனுப்ப இலங்கை இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, நேற்று காலை இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் 30 மீனவர்களும் சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில், தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள், அவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்து இருந்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.