

தூத்துக்குடி: பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி தனது உறவினர்களுடன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரகாரம் வரை வேனில் வந்ததால் பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கருங்கல் யாகசாலை மண்டபம், செல்போன் பாதுகாப்பு மையம், 3 சுகாதார வளாகங்களின் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மதன்ராஜா, ஸ்ரீநாத் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் கோயில் பொதுத் தகவல் மையம் அருகே உள்ள பிரகாரம் வரை வேனில் வந்து இறங்கினர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
போலீஸார் தடுக்கவில்லை: பொதுமக்கள் வரும் கார்களை கோயிலுக்கு வெளியே போலீஸார் நிறுத்தி விடுவது வழக்கம். ஆனால், அமைச்சர் விஜயலட்சுமி கோயில் பிரகாரம் வரை வாகனத்தில் வந்ததை போலீஸாரோ, கோயில் தனியார் பாதுகாப்பு அதிகாரிகளோ தடுக்கவில்லை என பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.
இதேபோல், கோயில் வளாகத்தில் பிரகாரம் அருகே வரை தவெக திருச்செந்தூர் தொகுதி செயலாளர் பிரைட்டருக்கு சொந்தமான கார் அனுமதிக்கப்பட்டிருந்தது. கோயில் பிரகாரத்தில் ஆகம விதிகளை மீறி வாகனங்களை அனுமதிக்க கூடாது என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.