‘அபிஜித் தீப்கேவை டெல்லி போலீஸ் கடத்திச் சென்றுவிட்டது’ - சிஜேபி குற்றச்சாட்டு

‘அபிஜித் தீப்கேவை டெல்லி போலீஸ் கடத்திச் சென்றுவிட்டது’ - சிஜேபி குற்றச்சாட்டு
Updated on: 
1 min read

புதுடெல்லி: அபிஜித் தீப்கே, சவுரவ் தாஸ் உள்ளிட்டோரை டெல்லி போலீசார் கடத்திச் சென்றுவிட்டதாக காக்ரோச் ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றம் சாட்டியும் காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் பெரிய அளவிலான போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இப்போராட்டத்தைத் தடுத்து நிறுத்த டெல்லி காவல் துறையினர் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற காக்ரோச் ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களான அபிஜீத் திப்கே, அசுதோஷ் ரங்கா மற்றும் சவுரவ் தாஸ் ஆகியோர் டெல்லி காவல் துறையால் கடத்தப்பட்டு 10 மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டதாகவும், அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை என்றும் காக்ரோச் ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரையும் இதுபோன்று கடத்திச் செல்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக மும்பையிலிருந்து டெல்லி வந்தடைந்த விமானம் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும், உடனடியாக அங்கு சென்ற டெல்லி காவல் துறையினர் அபிஜீத் திப்கே மற்றும் அவரது சகாக்களை கைது செய்தனர்.

விமானத்துக்குள்ளேயே காவல்துறையினர் தங்களைக் கைது செய்ய வந்தபோது, அதனை அபிஜீத் திப்கே தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேரலை செய்தார். "எங்களைக் கைது செய்யுங்கள், நாங்கள் கைது செய்யப்படவே இங்கு வந்துள்ளோம், உங்களைப் பார்த்து நாங்கள் அஞ்சவில்லை" என அவர்கள் கோஷமிட்டனர்.

போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் டெல்லியை நோக்கி வரக்கூடும் என்பதால் மத்திய டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் மற்றும் துணை ராணுவப் பாதுகாப்பு போடப்பட்டது. முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாலும், தீவிர வாகன சோதனை நடைபெறுவதாலும் மத்திய டெல்லி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

தடையை மீறி போராடுபவர்களை கைது செய்வதற்காக 4 ஆயிரம் பெண் போலீஸார் உட்பட 14 ஆயிரம் போலீஸார் டெல்லி முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘அபிஜித் தீப்கேவை டெல்லி போலீஸ் கடத்திச் சென்றுவிட்டது’ - சிஜேபி குற்றச்சாட்டு
டெல்லியில் மம்தா, கேஜ்ரிவால் உள்பட 5,000+ பேர் கைது - ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம் தீவிரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in