

சென்னை: தமிழகத்தில் 13 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் ரூ.125 கோடி மதிப்பீட்டிலான சிறப்பு தூர்வாரும் பணிகளை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் விவசாயப் பணிகள் தடையின்றி நடைபெறவும், நீர்நிலைகளை முறையாகப் பராமரிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக அமைச்சர் துரைமுருகன் பெரிய அளவிலான தூர்வாரும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். 13 டெல்டா மாவட்டங்கள் மற்றும் மதுரை, கோவை மண்டலங்களைச் சேர்ந்த 11 மாவட்டங்கள் என மொத்தம் 24 மாவட்டங்களில் இப்பணிகள் நடைபெறவுள்ளன.
சுமார் 5,954.94 கி.மீ நீளத்துக்கு ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள் மற்றும் வடிகால்கள் தூர்வாரப்பட உள்ளன. ரூ.125 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இப்பணிகள் மூலம் சுமார் 13 லட்சம் ஏக்கர் நிலங்கள் நேரடிபாசன வசதி பெறும். தூர்வாரும் பணிகளுடன் சேர்த்து, வேலூர் மாவட்டத்தில் சுமார் ரூ.70 கோடி மதிப்பீட்டிலான புதிய கட்டுமானப் பணிகளுக்கும் அமைச்சர்துரை முருகன் அடிக்கல் நாட்டினார்.
அந்தவகையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அம்மூண்டி கிராமம் அருகே ரூ.46.44 கோடி செலவில் புதிய தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இதன்மூலம் 600.80 ஹெக்டேர் நிலங்கள் பயன்பெறும். மேலும், காட்பாடி வெப்பாலை கிராமம் அருகே ரூ.23.08 கோடி செலவில் புதிய தடுப்பணை கட்டவும் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம் 600 ஹெக்டேர் நிலங்கள் பயன்பெறும்.
நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: ஜூன் மாதம் மேட்டூர் அணை பாசனத்துக்காகத் திறக்கப்படும்போது, தண்ணீர் எவ்விதத் தடையுமின்றி கடைமடைப் பகுதி வரை சென்றடைய வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி, முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு தூர்வாரும்பணிகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளன. பொறியாளர்கள் இந்தப் பணிகளைச் செவ்வனே கண்காணித்து, குறித்த காலத்துக்குள் தரமாக முடித்து மக்கள்பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இவ்வாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
இந்த நிகழ்வில் நீர்வளத்துறைச் செயலாளர் ஜெ.ஜெயகாந்தன், தலைமைப் பொறியாளர் (பொது) சு.கோபாலகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.