

படம்:எஸ்.சத்திய சீலன்
சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் அதிகாரியிடம் இன்று (ஏப். 2) வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. வருகிற 6-ம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். அன்று மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படவிருக்கிறது. இதனிடையே திமுக, அதிமுக, தவெக மற்றும் நாதக ஆகிய கட்சி நிர்வாகிகள் தீவிரமாக களத்தில் செயலாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில். திமுக சார்பில் 2-வது முறையாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் அதிகாரியிடம் இன்று (ஏப். 2) வேட்புமனு தாக்கல் செய்தார் . சேப்பாக்கத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுகந்தியிடம், அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசைப்பட்டியலில் 19-வதாக இடம்பெற்றுள்ள சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, சென்னையின் மிக முக்கியமான அடையாளங்களை உள்ளடக்கியது.
இந்த தேர்தலில் திமுக சார்பில் மீண்டும் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். அதிமுக-வில் ஆதி ராஜாராம், நாதக-வில் ஆயிஷா பேகம், தவெக-வில் டி.செல்வம் ஆகியோர் களம் இறங்கியுள்ளார்கள். இந்த ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, இத்தொகுதியில் 79 ஆயிரத்து 412 ஆண்கள், 84 ஆயிரத்து 396 பெண்கள், 58 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 63,866 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.