

முதல்வர் ஸ்டாலின் பரப்புரை
ஈரோடு: “காலால் தவழ்ந்து சென்று, காலை வாரிவிட்டு ஆட்சிக்கு வந்தோம். இந்த திமுகவும் ஸ்டாலினும் ஒரு தேர்தலில் கூட ஜெயிக்க விடுவதில்லை என்ற பொறாமையில் பொய்யையும் புரளியையும் பரப்புகிறார் எடப்பாடி பழனிசாமி” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, “பெரியார் பிறந்த மண் ஈரோடு. நான் பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் பாசத்தை பொழிகின்றனர். தமிழ்நாட்டு மக்கள் இந்த தேர்தலில் என் டி ஏ கூட்டணிக்கு ஏமாற்றத்தை அளிப்பார்கள். டபுள் எஞ்சின் தமிழ்நாட்டில் தடம்புரண்டுதான் போகும்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருந்திருப்பீர்கள். காரணம், திராவிட மாடல் என்பது ‘டெவலப்மெண்ட் மாடல்’. கடந்த 5 ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக நீண்ட நாள் கோரிக்கையான அத்திக்கடவு–அவிநாசி திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிய ஆட்சி திராவிட மாடல் ஆட்சி தான். ஆட்சிக்கு வந்ததும் ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டது. ஈரோடு பேருந்து நிலையம், அணைக்கட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு அயன் பட்டாக்களை உடனடியாக வழங்கியதும் திராவிட மாடல் ஆட்சிதான் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியாகவும், அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றமாகவும், அனைத்து மாவட்டங்களின் ஒருங்கிணைந்த முன்னேற்றமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்தி வருகிறோம்.
வேளாண்மை, உட்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் நிறைவேற்றிய உரிமையுடன் நான் கம்பீரமாக வாக்குக் கேட்கிறேன். ஆனால், நம்மை எதிர்த்து வாக்குக் கேட்பவர்கள் நமது திட்டங்களைப் பற்றி பேசுவதில்லை. அவர்களின் விமர்சனங்களை பார்க்கும்போது சிரிப்பாகத்தான் இருக்கிறது. திராவிட மாடல் 2.O ஆட்சியில் உலகமே திரும்பி பார்க்கும் வகையில் தமிழ்நாட்டை உயர்த்துவோம்.
காலால் தவழ்ந்து சென்று, காலை வாரிவிட்டு ஆட்சிக்கு வந்தோம். இந்த திமுகவும் ஸ்டாலினும் ஒரு தேர்தலில் கூட ஜெயிக்க விடுவதில்லை என்ற பொறாமையில் பொய்யையும் புரளியையும் பரப்புகிறார் எடப்பாடி பழனிசாமி. மெட்ரோ ரயில் திட்டம், 100 நாள் வேலை திட்டத்தை ஒழித்தது, நீட், சிஏஏ சட்டம் கொண்டு வந்தது, வேளாண் சட்டம், கல்வி நிதியை தராதது, ஜிஎஸ்டி இழப்பீடு, மாநில உரிமைகளை பறிப்பது என துரோகங்களின் முழு உருவமாக இருப்பதுதான் இபிஎஸும் அவருடைய கூட்டாளிகளான பாஜகவும்.
பொள்ளாச்சி வழக்கை விசாரிக்க முன்வராத பழனிசாமிக்கு பெண்கள் பாதுகாப்பை பற்றி பேச அருகதை இருக்கிறதா? சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை தரும் அளவுக்கு சட்டங்களை கொண்டு வந்துள்ளோம். பெண்களை பாதுகாத்து கல்லூரிகளுக்கும் வேலைகளுக்கும் அனுப்பி வைத்து தலை நிமிர வைத்திருப்பது திராவிட மாடல் அரசு.
இந்த உண்மைகளை, அவதூறுகளை பரப்பி மறைக்கலாம், திசை திருப்பலாம், என் டி ஏ ஆட்சியை கொண்டு வந்து தமிழ்நாட்டை கபளீகரம் செய்யலாம் என கற்பனை கோட்டையில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என தெரிவித்தார்.