

கோப்புப்படம்
சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நாளை (பிப்.15) உருவாகக்கூடும்.
தமிழகத்தில் நாளை முதல் 18-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, பிப்.19-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், 20-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பனிமூட்டம்: வட தமிழக மாவட்டங்களில் நாளை முதல் 19-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
16-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புது்ச்சேரியிலும், 17-ம் தேதி திருவள்ளூர், சேலம், தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும், 18-ம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும், 19-ம் தேதி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கில் தலா 2 செமீ, காக்காச்சி, மாஞ்சோலையில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.