ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு கோரிய வழக்கு: வாக்குமூலத்தை வீடியோ பதிய கோரும் மனுவுக்கு தோனி பதில் அளிக்க அவகாசம்

ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு கோரிய வழக்கு: வாக்குமூலத்தை வீடியோ பதிய கோரும் மனுவுக்கு தோனி பதில் அளிக்க அவகாசம்
Updated on: 
1 min read

சென்னை: கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், தனக்கு எதிராக அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக கூறி ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு கோரி தோனி, கடந்த 2014-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில், தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையி்ல், தோனியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்யக்கோரி சம்பத்குமார், உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தோனியின் வாக்குமூலத்தை கண்காணிக்க நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும், வாக்குமூலத்தை எடிட் செய்யாமல் முழுமையாக வழங்க வேண்டும் என்றும், ஐந்து நட்சத்திர விடுதி அல்லது தனியார் பங்களாக்களில் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்யாமல், நீதிமன்றம் அல்லது அரசு கட்டிடங்களுக்கு தோனியை வரவழைத்து வீடியோ பதிவுசெய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டது.

குறுக்கிட்ட நீதிபதி, நட்சத்திர விடுதியில் தோனியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதில் என்ன பிரச்சினை, அதற்கான செலவுகளை அவர்கள் தானே செய்யப் போகிறார்கள்? என கேள்வி எழுப்பினார்.

அக்.29-க்கு தள்ளிவைப்பு

இந்த மனுவுக்கு பதிலளிக்க தோனி தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதையேற்ற நீதிபதி, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாரின் மனுவுக்கு தோனி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்.29-க்கு தள்ளிவைத்துள்ளார்.

ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு கோரிய வழக்கு: வாக்குமூலத்தை வீடியோ பதிய கோரும் மனுவுக்கு தோனி பதில் அளிக்க அவகாசம்
ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in