

மதுரை: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நேற்று மாலை 5 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து, திருப்பரங்குன்றத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தும், ‘முருகனுக்கு அரோகரா’, ‘கந்தனுக்கு அரோகரா’ என விண்ணதிர முழக்கமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தீபம் ஏற்ற ஏற்பாடு செய்த நீதிபதிகளுக்கு நன்றியும் தெரிவித்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடாக விளங்கும் திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என பக்தர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். கடந்த ஆண்டு இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றுவதுடன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
ஆனால், அந்த உத்தரவு அப்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதையடுத்து, அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோரினார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. எனினும், தனி நீதிபதியின் உத்தரவை உயர் நீதிமன்ற அமர்வு உறுதி செய்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை கடந்த நவம்பர் 20-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், நவம்பர் 24-ம் தேதி திருக்கார்த்திகை நாளில் தீபத்தூணில் தீபம் ஏற்ற இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அன்றும் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாமல் வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், நவம்பர் 28-ம் தேதி (நேற்று) தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதுடன், இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோரை நியமித்தது.
இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவரும் நேற்று காலை 8.30 மணிக்கு மதுரை வந்தனர். விமான நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன், சிஆர்பிஎஃப் தென் மண்டல ஐஜி டி.விக்ரம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, மாலை 5 மணிக்கு தீபம் ஏற்ற முடிவு செய்யப்பட்டது.
தீபம் ஏற்றும் நிகழ்வைக் காண்பதற்காகவும், வழிபாடு நடத்துவதற்காகவும் நேற்று காலை முதலே மதுரை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்தனர். பலர் பால்குடம் எடுத்தும், கையில் வேல் ஏந்தியும் வந்தனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தும் வகையில், நேற்று முன்தினம் இரவு முதலே மதுரை விமான நிலையம், கோவை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிஆர்பிஎஃப் வீரர்கள் திருப்பரங்குன்றத்துக்கு வரவழைக்கப்பட்டனர். சிஆர்பிஎஃப் தென்மண்டல ஐஜி டி.விக்ரம் தலைமையில் 750 துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், பழனி ஆண்டவர் கோயில், மலை உச்சி, மலைப் பாதைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மலை உச்சியில் உள்ள தர்காவுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. கிரிவலப் பாதை, மலையடிவாரம் மற்றும் நகரின் முக்கியப் பகுதிகளில் உள்ளூர் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் நேற்று காலை 11.24 மணிக்கு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு வந்தனர். அவர்களை இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் ஜெயராமன், கோயில் துணை ஆணையர் ஜி.செல்வி ஆகியோர் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க வரவேற்றனர்.
தொடர்ந்து, கோயிலில் உள்ள சத்தியகிரீஸ்வரர், கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சுப்பிரமணிய சுவாமி சந்நிதிகளில் நீதிபதிகள் வழிபட்டனர். அப்போது, நீதிபதி வைத்தியநாதனுக்கு சிவாச்சாரியார்கள் பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்காகத் தயாரிக்கப்பட்ட 3 மண் சட்டிகள், 30 கிலோ நெய், 50 மீட்டர் காடாத் துணி, 5 கிலோ கற்பூரம் உள்ளிட்ட பூஜைப் பொருட்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜைக்குப் பிறகு அவை நீதிபதிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
கோயிலில் இருந்து புறப்பட்ட நீதிபதிகள், கிரிவல வீதிகள் வழியாக மலையடிவாரத்தில் உள்ள கோட்டைத் தெருவுக்கு நடந்து சென்றனர். அங்கு மண் சட்டிகள் உள்ளிட்ட பொருட்களை கோயில் பணியாளர்களிடம் ஒப்படைத்து மலைக்கு எடுத்துச் செல்ல அறிவுறுத்தினர். துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன் கோயில் பணியாளர்கள் மதியம் 12.20 மணியளவில் படிக்கட்டுகள் வழியாகப் பூஜைப் பொருட்களை மலைக்கு எடுத்துச் சென்றனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பக்தர்கள் மலை உச்சிக்குச் சென்று தீபம் ஏற்றும் நிகழ்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால், பக்தர்கள் பலரும் மலைப் பாதை வழியாகச் செல்ல முயன்றனர். அப்போது, ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் மலையேறினால் நெரிசல் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறி, சிஆர்பிஎஃப் தென்மண்டல ஐஜி விக்ரம் அவர்களிடம் ஒத்துழைப்பு கோரினார்.
இதனால் பக்தர்களுக்கும் துணை ராணுவ வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக மாலை வரை அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
திட்டமிட்டபடி மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றுவதற்காக, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன், மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வீரராகவ ராவ் உள்ளிட்ட சுமார் 50 பேர் கொண்ட குழுவினர் மாலை 3 மணியளவில் மலை உச்சிக்குச் சென்றனர்.
அங்கு தீபத்தூணில் கற்பூரக் கட்டிகள் வைத்து சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து, தீபத்தூணைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறிய ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் சரியாக மாலை 5 மணிக்கு தீபத்தை ஏற்றினர்.
தீபம் ஏற்றப்பட்டதும் மலை உச்சியில் இருந்த பட்டர்கள், நிர்வாகக் குழுவினர் மட்டுமின்றி மலையடிவாரத்தில் திரண்டிருந்த ஆதீனங்கள், மடாதிபதிகள், இந்து அமைப்புகளின் நிர்வாகிகள், பக்தர்கள் என அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். 'முருகனுக்கு அரோகரா', 'கந்தனுக்கு அரோகரா', 'வெற்றிவேல் வீரவேல்' என விண்ணைப் பிளக்கும் வகையில் முழக்கமிட்டனர்.
16 கால் மண்டபம், திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம், கோட்டைத்தெரு, சந்நிதி தெரு, பசுமலை-திருமங்கலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் திரண்டிருந்த பொதுமக்கள், தீபம் ஏற்றப்பட்டதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இந்து அமைப்பினர் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பல்வேறு இடங்களில் பக்திப் பாடல்கள், பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகள் மற்றும் பிரசாதங்களை வழங்கி கொண்டாடினர்.
பல தலைமுறைகளாகத் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்த பக்தர்களின் கோரிக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் நிறைவேறியதாகக் கூறி, நீதிபதிகளுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் பகுதியில் பொதுமக்கள் தங்களது வீடுகள் முன்பும் அகல் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர்.
நேற்று காலை முதல் இரவு வரை திருப்பரங்குன்றம் மலைப் பகுதியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த துணை ராணுவத்தினர், தீபம் ஏற்றும் நிகழ்வை சட்டம், ஒழுங்கு பிரச்சினையில்லாமல் பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் நிறைவேற்றி அனைவரது பாராட்டையும் பெற்றனர்.