

சென்னை: ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் குறைந்துள்ள நிலையில், சென்னையில் பச்சை நிற பால் பாக்கெட் உட்பட பல்வேறு பால் வகைகளின் விநியோகம் 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆவின் நிறுவனத்தின் தினசரி பால் கொள்முதல் தற்போது 26 லட்சம் லிட்டராக சரிந்துள்ளது. இதனால், பச்சை நிற பால் பாக்கெட் உட்பட பல்வேறு பால் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னை, புறநகரில் தினசரி 16 லட்சம் பால் விநியோகம் செய்யப்பட்டது.
தற்போது 14 லட்சம் முதல் 14.5 லட்சம் லிட்டர்தான் விநியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் ஒன்றரை லட்சம் பால் விநியோகம் ஆவின் நிர்வாகம் குறைத்து உள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து, தமிழக பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி கூறியதாவது: ஆவின் பால் தினசரி கொள்முதல் தற்போது 26 லட்சமாக இறங்கிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் கொள்முதல் விலை உயர்த்தாதது ஆகும்.
திமுகவின் தவறான நடவடிக்கையால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, புறநகரில் சுமார் 30 சதவீதம் பாலை குறைத்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு போதிய பாலை அளிக்க முடியவில்லை.
ஆவினின் நஷ்டத்தை சரி செய்ய கொள்முதல் விலை, விற்பனை விலையை உயர்த்தினால் பாலை தட்டுப்பாடு இல்லாமல் கொடுக்க முடியும். எனவே, கொள்முதல் விலையை ரூ.6-ம், விற்பனை விலையை ரூ.10-ம் உயர்த்த வேண்டும். பால் முகவர்களுக்கு கமிஷன் தொகையை ரூ.2 உயர்த்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆவின் விளக்கம்
இதுகுறித்து, ஆவின் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : சென்னை முழுவதும் அனைத்து வகையான பால் வகைகளையும் ஆவின் நிறுவனம் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து விநியோகிக்கிறது.
ஆவின் நிறுவனம் தனது பரந்த விநியோக கட்டமைப்பின் மூலம் சென்னை பெருநகரப் பகுதியில் உள்ள நுகர்வோருக்கு தினசரி சராசரியாக சுமார் 14.50 லட்சம் லிட்டர் பாலை விநியோகம் செய்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், பால் விநியோகம் 36 ஆயிரம் லிட்டர் அதிகரித்துள்ளது.
எந்தவொரு பால் வகையின் விநியோகத்திலும் குறைப்பு ஏதுமில்லை. வழக்கமான தேவை மற்றும் நுகர்வோரின் தற்போதைய தேவைக்கேற்ப பால் விநியோகம் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.