

ஜெய் பாலாஜி
மதுரை: மோசடி வழக்கில் கைதான அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் உதவியாளர் ஜெய் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். விசாரணைக்குப் பின்னர், அவருக்குத் துணைபோன அதிகாரிகளும், அரசியல் புள்ளிகளும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் உதவியாளராக இருந்தவர் ஜெய் பாலாஜி (42). பல்வேறு புகார்கள் காரணமாக இவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.7 கோடி மதிப்புள்ள வீட்டுமனைகளை வாங்கி ஏமாற்றியதாகவும் புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி ஜெய் பாலாஜி, அவரது மனைவி கலாவதி ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
யார், யார் மூலமாக, எந்தெந்த மோசடிகளில் ஈடுபட்டார், அவருக்கு உதவிய முக்கிய அரசியல் புள்ளிகள், அதிகாரிகள் விவரங்களை போலீஸாரிடம் ஜெய் பாலாஜி கூறியுள்ளதாகத் தெரிவிக்கிறது. எனவே, கணவன், மனைவி இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: அமைச்சரிடம் உதவியாளராக இருந்ததால், அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தனது ரியல் எஸ்டேட் தொழிலை விரிவுபடுத்தி உள்ளார். மாதந்தோறும் தவணை முறையில் குறிப்பிட்ட தொகை செலுத்தினால், குறைந்த விலையில் வீட்டுமனை என விளம்பரம் செய்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்துள்ளார். அமைச்சரின் உதவியாளர் என்பதால் இவரை நம்பி மக்களும், பல்வேறு நிறுவனத்தைச் சேர்ந்தோரும் ஏமாந்துள்ளனர்.
புகார் அளிக்க தயக்கம்: ஜெய் பாலாஜி மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்கத் தயங்குகின்றனர். மதுரை மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் நடந்த ரியல் எஸ்டேட் முறைகேடுகள் தொடர்பாகவும் அவர் மீது புகார் இருப்பதால், அதற்கான ஆவணங்களைத் திரட்டுகிறோம்.
மதுரை கட்டுமான நிறுவன உரிமையாளர் அளித்த புகாரில், ஓரளவுக்கு மட்டுமே தகவல்களைப் பெற முடிந்தது. அவர் மீதான சில முறைகேடுகளை விசாரிக்க காலஅவகாசம் தேவைப்படுகிறது. எனவே, ஜெய் பாலாஜி, அவரது மனைவியை காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய இருக்கிறோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர். இந்த விசாரணைக்குப் பின்னர், ஜெய் பாலாஜிக்கு உதவிய அதிகாரிகள் மற்றும் அரசியல் புள்ளிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.