

ராஜேஸ்வரி சுவே
மதுரை: குடிமைப்பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் 2-வது இடம்பிடித்து மதுரை வாடிப்பட்டி எலக்ட்ரிக் கல் கடைக்காரர் முருகதாஸ் என்பவரின் மகள் ராஜேஸ்வரி சுவே சாதனை படைத்துள்ளார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகதாஸ். இவர், எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி நாகராணி. அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு ராஜேஸ்வரி சுவே என்ற மகளும், குமாரச்செல்வன் என்ற மகனும் உள்ளனர். ராஜேஸ்வரி சுவே கடந்த 2018-ல் பிஇ (இஇஇ) முடித்துவிட்டு போட்டித் தேர்வுக்கு தயாராகி வந்தார். ஏற்கெனவே 3 முறை யுபிஎஸ்சி தேர்வு எழுதிய நிலையில் 2024-ல் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று துணை ஆட்சியரானார்.
தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில் பயிற்சி அதிகாரியாக பணியில் இருக்கிறார். இருப்பினும், பணிபுரிந்து கொண்டே தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் இணைந்து யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி பெற்றார்.
பின்னர் தேர்வில் பங்கேற்று முடிவுகளுக்காக காத்திருந்தார். இந்நிலையில் 2025-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தேசிய அளவில் 2-வது இடத்தை பெற்று ராஜேஸ்வரி சுவே சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘போட்டித் தேர்வுகளுக்காக தொடர்ந்து பயிற்சி பெற்று வந்தேன். 7 ஆண்டுகள் தொடர் முயற்சி, உழைப்புக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது.
எனது பெற்றோர் அளித்த ஊக்கத்தால் என்னால் சாதிக்க முடிந்தது. தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 225 பேருக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் நானும் இணைந்து பயனடைந்துள்ளேன்’ என்று கூறினார்.