

தென்காசி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீஸாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில், போலீஸாருக்கு உச்சபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும் என, உயிரிழந்த ஜெயராஜின் மகள் கருத்து தெரிவித்தார்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், இவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி கரோனா ஊரடங்கு நேர கட்டுப்பாட்டை தாண்டி கடைதிறந்து வைத்திருந்ததாகக் கூறி சாத்தான்குளம் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு தந்தை, மகன் இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் கடுமையாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கீழ் நீதிமன்றம் சார்பில் மேலும் 6 மாதகாலம் விசாரணை காலத்தை நீட்டிக்க அனுமதி கோரியது. இதை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம் 3 மாத கால அவகாசம் அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து தினமும் விசாரணை என வழக்கு வேகமெடுத்தது.
இதன் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்பட்ட 9 போலீஸாரும் குற்றவாளிகள் என்றும் அவர்களுக்கான தண்டனை 30-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தது. நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு குறித்து, தென்காசியில் வசித்து வரும் ஜெயராஜின் மகள் பெர்சியா கூறும்போது, “சாத்தான்குளம் காவல்துறையினர், எனது தந்தை ஜெயராஜ் மற்றும் தம்பி பெனிக்ஸை அடித்து துன்புறுத்தியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
எனது தந்தை மற்றும் தம்பியின் கொலை வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என கடந்த 6 ஆண்டுகளாக நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்தோம். இதுபோன்று ஒரு சம்பவம் இனி நடைபெறாமல் இருக்க, குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்றார்.