

கொடைக்கானல் பெருமாள்மலையில் ஊதா வண்ணத்தில் பூத்துக்குலுங்கும் ஜக்கரன்டா மிமோசி போலியா மரம்.
பழநி: கோடை காலத்தை வரவேற்க, கொடைக்கானல் மலைப்பகுதியில் ஊதா வண்ணத்தில் பூத்துக் குலுங்கும் ஜக்கரன்டா மிமோசிபோலியா மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துவருகின்றன.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பல்வேறு கால நிலைகளில் பூக்கும் அரியவகை பூச்செடிகள் அதிகளவில் உள்ளன.
அந்த வகையில் கோடை காலத்தில் மட்டுமே பூக்கும் தென் அமெரிக்காவை தாயகமாக கொண்ட, ‘ஜக்கரன்டா மிமோசிபோலியா’ என்ற மரத்தில் ஊதா வண்ண மலர்கள் கொடைக்கானல், பெருமாள்மலை, வட கவுஞ்சி, அஞ்சு வீடு உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியிலும், வீடுகளிலும், சாலையோரங்களிலும் பூத்துக் குலுங்குகின்றன.
இந்த வகை மரம் இந்தியா மட்டுமின்றி ஆப்பிரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, வடக்கு ஆப்பிரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் மலைத்தொடர்கள், வனப்பகுதியில் அதிகளவில் காணப்படுகின்றன.
இந்தவகை மரங்கள் பூக்கள் பூக்கும் தருணத்தில், அனைத்து இலைகளும் தானாகவே உதிர்ந்துவிடும் வினோத தன்மை கொண்டது. இந்த பூக்களில் 5 மடல்கள் இருக்கும். தற்போது மரத்தில் ஒரு இலை கூட இல்லாமல், மொத்த மரமும் ஊதா வண்ணமாக நிரம்பி ரம்மியமாகக் காட்சி தருகின்றன.
இந்தப் பூக்களை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்தும், மரங்களுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர். இதுகுறித்து தோட்டக்கலை துறையினர் கூறும்போது, ஜக்கரன்டா மிமோசிபோலியா பூக்களுக்கு ப்ளு குல்மோஹர் என்ற பெயரும் உண்டு.
கோடை காலத்தை வரவேற்கும் விதமாக கோடை காலத்தில் மட்டுமே இந்த வகை பூக்களை பார்க்க முடியும். மே மாதம் வரை இந்த பூக்கள் பூத்துக் குலுங்கும் எனத் தெரிவித்தனர்.