

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேருக்கு அக்டோபர் 30-ஆம் தேதி தேதி வரையிலும் இரண்டாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து அக்டோபர் 3 அன்று கடலுக்குச் சென்ற எடின் புரோகர் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகை எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.
படகிலிருந்த எபிஸ்டன, மத்தியா , ஜான்ஜெய்சன் , ஸ்டீவன்சன், சுபார்டன், அபிஸ்டன், மோபிஸ், அந்தோணி பிரதீப், அந்தோணி புரூடஸ் ஆகிய 9 பேர் மீனவர்கள் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று யாழ்ப்பாணம் மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர் சிறைப்பிடிக்கப்பட்ட 9 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீனவர்களின் காவல் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவடைந்ததை தொடர்ந்து 9 மீனவர்களும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, அக்டோபர் 30-ம் தேதி வரையிலும் இரண்டாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து 9 மீனவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.