

படம் : வீ.தமிழன்பன்
காரைக்கால்: ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், முதல் முறையாக உள் நாட்டிலேயே புதிதாக தயாரிக்கப்பட்ட, இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான H-561, H-562 என்ற 2 ஹோவர் கிராஃப்ட் ரோந்து கப்பல்கள் இன்று (அக்.16) மதியம் காரைக்கால் கடற்கரைக்கு வந்தன.
கோவாவில் உள்ள சவுகுலே கப்பல் கட்டும் தளத்தில், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட, முதல் கப்பலான H-561 கடந்த ஜூன் 18-ம் தேதி கோவாவில் கடலோர காவல்படையில் இணைக்கப்பட்டது. பின்னர் 2-வது கப்பலான H-562 இணைக்கப்பட்டு, 2 கப்பல்களும் இணைந்து கடந்த வாரம் கோவாவில் இருந்து புறப்பட்டு மேற்கு வங்காளத்தில் உள்ள ஹால்டியா நோக்கிச் செல்கின்றன.
ஹால்டியாவுக்குச் செல்லும் வழில் பல்வேறு மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட கடற்கரை வழியாக பயணித்துச் செல்கின்றன. அந்த வகையில் நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் இருந்து இன்று மதியம் காரைக்கால் கடற்கரைக்கு வந்து சேர்ந்தன.
கடல் பரப்பில் இருந்து கடற்கரை மணலில் சீறிப்பாய்ந்து, நிலப்பகுதியில் பயணித்து நிறுத்தி வைக்கப்பட்டன. அக்கப்பல்களை கடற்கரைக்கு வந்த பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் பார்த்தும், செல்பி எடுத்தும் சென்றனர். நாளை (அக்.17) காரைக்காலில் இருந்து புறப்பட்டு சென்னை வழியாக ஹால்டியா நோக்கிச் செல்கின்றன.
கப்பலின் சிறப்பு அம்சங்கள்: மணிக்கு சுமார் 45 கடல் மைல் வேகத்தில் செல்லும். நீரிலும், நிலத்திலும் பயணிக்க கூடியது. ஆழம் குறைந்த கடல் பகுதி, சேறு, சதுப்பு நிலம், மணல் திட்டு போன்ற இடங்களிலும் செல்லக்கூடியது. 8 டன் எடை. 9 மணி நேரம் தொடர்ந்து நடுக்கடலிலும், கரையிலும் இயங்கும்.
அதிநவீன ரேடார், ஜிபிஎஸ், நைட் விஷன் கேமரா, கம்யூனிகேஷன் சிஸ்டம், தீயணைப்பு கருவிகள், முதலுதவி வசதி மற்றும் 12.7 மி.மீ துப்பாக்கி பொருத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு நவீன உபகரணங்கள், பாதுகாப்பு அம்சங்களை கொண்டது. இதனால் கடலில் இருந்து கரைக்குத் தப்பிச் செல்பவர்களையும் துரத்திப் பிடிக்க முடியும்.