‘அண்ணாமலை பல்கலை. நிலத்தை விற்கச் சொல்வதா?’ - தமிமுன் அன்சாரிக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி |கோப்புப் படம்

சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி |கோப்புப் படம்

Updated on
2 min read

கடலூர்: அண்ணாமலை பல்கலைக்கழக நிதி நெருக்கடியை சமாளிக்க, பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலத்தில் 50 ஏக்கர் நிலத்தை விற்று நிதி நிலைமையை சமாளிக்கலாம் என சிதம்பரம் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி நேற்று சட்டப்பேரவையில் பேசினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து கடலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோ.மாதவன் வெளியிட்ட அறிக்கையில், “அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வரலாறு 1920-களின் தொடக்கத்திலேயே ஆரம்பமாகிறது. செட்டிநாட்டைச் சேர்ந்த கல்வி மற்றும் சமூகப் பணியாளரான ராஜா அண்ணாமலை செட்டியார், சிதம்பரத்தில் கல்வி நிறுவனங்களை உருவாக்கினார். ஸ்ரீ மீனாட்சி கல்லூரி, ஸ்ரீ மீனாட்சி தமிழ் கல்லூரி, ஸ்ரீ மீனாட்சி சமஸ்கிருத கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களை உருவாக்கினார்.

1928-ம் ஆண்டில் அண்ணாமலை செட்டியார் இந்த கல்வி நிறுவனங்களை அரசுடன் இணைத்து ஒரு பல்கலைக் கழகத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக Annamalai University Act, 1928 (Madras Act I of 1929) அடிப்படையில் 1929ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதும், இசை, வரலாறு, அறிவியல், விவசாயம், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளுடன் ஆல் போல் தழைத்து வளர்ந்தது.

இந்தச் சூழலில் பல்கலைக்கழகத்தின் நிதி மற்றும் நிர்வாக சிக்கல்களைத் தொடர்ந்து, இப் பல்கலைக்கழகத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று அன்றைய சிதம்பரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய அரசியல் தலைமை குழு உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை எழுப்பினார். இதனைத் தொடர்ந்து சிதம்பரத்தில் நடந்த அனைத்து கட்சிகள் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஊழியர்களின் போராட்டத்தின் காரணமாக அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா Annamalai University Act, 2013 (Tamil Nadu Act 20 of 2013) என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டம் 2013ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசுப் பல்கலைக்கழகமாக மாறியது.

இந்த பின்னணி உள்ள சுழலில் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர், அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் ஊழியர் பிரச்சினை சம்பந்தமாக முத்தரப்பு கூட்ட முடிவுகளை அமலாக்க வேண்டுமென பேசியதை வரவேற்கிறோம்.

நிதி நெருக்கடி சம்பந்தமாக பேசிய சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ஆயிரம் ஏக்கர் நிலத்தில் 50 ஏக்கர் நிலத்தை விற்று நிதி நிலைமையை சமாளிக்கலாம் என பேசி உள்ளார். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட குழு வன்மையாக கண்டிக்கிறது.

ஏற்கெனவே பல்கலைக்கழகத்திற்கு போதிய நிதியை ஒதுக்காத தமிழ்நாடு அரசாங்கத்தை எதிர்த்து பேசாமல் கண்ணிரெண்டு விற்று சித்திரம் வாங்குதல் போல் பல்கலைக்கழகத்தின் நிலத்தை விற்பது உகந்ததல்ல. நூற்றாண்டு கால பல்கலைக்கழகத்தினுடைய சொத்துகளை விற்பது என்பது சரியான முடிவு அல்ல. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் பல்கலைக்கழகம் மேலும் விரிவு படுத்த வேண்டிய அவசியமுள்ள நிலையில் இருப்பதை சுருக்குவது என்பது சரியான நடைமுறை அல்ல.

ஆகவே தமிமுன் அன்சாரி, சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அடிப்படையில் பல்கலைக்கழகத்தை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p>சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி |கோப்புப் படம்</p></div>
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in