நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரவும் வலியுறுத்தல்
மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ்

மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ்

Updated on
1 min read

சென்னை: நீட் நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி சட்டப்பேரவையில் தமிழக அரசு கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேறியது. இந்தத் தீர்மானத்துக்கு பாஜக உறுப்பினர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ், நீட் தேர்வு முறைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்தார். இதற்கு திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜக எம்எல்ஏ ஒருவர் மட்டும் வெளிநடப்பு செய்தார்.

அதன்பின் அமைச்சர் அருண்ராஜ் கூறுகையில், “மருத்துவக் கல்வி என்பது வெறும் தொழில்முறை கல்வி மட்டுமல்ல; அது மனித உயிர்களை காப்பாற்றும் உன்னத பணிக்கான கல்வி. அந்த கல்விக்கான வாய்ப்பு பொருளாதார வசதி உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், திறமையும், அர்ப்பணிப்பும் கொண்ட ஒவ்வொருவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு.

தமிழகம் பல்லாண்டு காலமாக சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட கல்விக் கொள்கையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய மாநிலம். 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை வழங்கப்பட்ட காலத்தில் கிராமப்புற மாணவர்கள், ஏழை எளிய மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் ஆகியோருக்கு மருத்துவக் கல்வியில் குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் கிடைத்தன.

அந்தக் கொள்கையின் பலனாகவே இன்று இந்தியாவில் சிறந்த பொதுச் சுகாதார கட்டமைப்பை கொண்ட மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது.

நீட் தேர்வால் தனியார் பயிற்சி மையங்கள் தான் பலனடைகின்றன. பல குடும்பங்கள் நீட் பயிற்சிக்காக பெரும் தொகையை செலவு செய்ய வேண்டியதாக இருக்கிறது. பொருளாதார, பணம் பொருந்திய மாணவர்களுக்கு இது கூடுதல் வாய்ப்பை வழங்குகிறது. அதே சமயம் கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்கள், தினக்கூலி தொழிலாளி, விவசாயின் குழந்தைகள் அதே அளவிலான பயிற்சியை பெற முடியுமா என்பது தான் தமிழகம் எழுப்பும் அடிப்படைக் கேள்வி.

நீட் தேர்வு முறையானது சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கு பதிலாக அவற்றை மேலும் அதிகரித்துள்ளது. இந்த அரசு எந்த மாணவரின் கனவையும் பறிக்க விரும்பவில்லை. மாறாக, திறமையுள்ள ஒவ்வொரு மாணவரின் கனவும், அவர்களின் குடும்ப பொருளாதார பின்னணி காரணமாக தடைப்படக்கூடாது என போராடுகிறது.

மாணவர்களின் பனிரெண்டு ஆண்டு கால கல்வியை புறந்தள்ளி; ஒரு நாள் நுழைவுத் தேர்வு மாணவர்களின் உயர்கல்வியை தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நீட் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு வருவதுதான்” என்றார்.

இதையடுத்து, நீட் தேர்விலிருந்து விலக்கு கோரிய தனித்தீர்மானம் பேரவையில் நிறைவேறியது.

<div class="paragraphs"><p>மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ்</p></div>
“இடம் மாறியது பரவாயில்லை; அதற்காக துதிபாட அவசியமில்லை” - ஓபிஎஸ்ஸுக்கு செங்கோட்டையன் பதிலடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in