திருமாவளவன்
“ரஜினியை திமுக மிரட்டியதாக ஆதவ் அர்ஜுனா கூறியது கற்பனை” - திருமாவளவன்
மதுரை: “திமுகவால் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்பது அவரை கொச்சைப்படுத்தும் விமர்சனம்” என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமான மூலம் இன்று மதுரை வந்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மானாமதுரை இளைஞர் ஆகாஷ் படுகொலையில் தொடர்புடைய காவல் துறையினர் கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
படுகொலையில் தொடர்புடைய காவல் துறையினர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களது குடும்பத்துக்கு உரிய இழப்பீடுத் தொகை வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவர் அரசு வேலை வாய்ப்பு வழங்கவேண்டும்.
தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கிலும் தொடர்புடைய நபர்களை உடனே கைது செய்யவேண்டும். அவரின் குடும்பத்துக்கு இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க தமிழக முதல்வருக்கு வலியுறுத்திகிறோம்.
ஈரான் மீதான தாக்குதால் எரிவாயு, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயுவை மக்கள் வாங்கி சேமிக்கும் பதற்றம் உருவாகியுள்ளது. ஈரான் மீதான போரை நிறுத்த வேண்டும். இதுவரை போரை நிறுத்த பிரதமர் வாய் திறக்கவில்லை. அவர் வாய் திறக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
தமிழகத்தில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது. இந்தக் கூட்டணியை எதிர்க்க, இன்னும் வலிமையான கூட்டணி உருவாகவில்லை. அதிமுக, பாஜக, தவெக கட்சிகளின் கூட்டணி இன்னும் வடிவம் பெறவில்லை. திமுக கூட்டணிக்கு எதிரான வதந்திகளை பரப்புகின்றனர். தமிழக மக்கள் மதசார்பற்ற அரசியல் சக்திகளுக்கு துணை நிற்பார்கள். மீண்டும் திமுக கூட்டணியை வெற்றி பெற வைப்பார்கள் என நம்புகிறேன்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என திமுக மிரட்டியதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறியது கற்பனை. ரஜினி அரசியல், அதிகாரம், ஆட்சிக்கு ஆர்வம் காட்டி மயங்கும் நபர் அல்ல. அந்த நிலையில் இருந்து வெளியேறிவிட்டார். விலகி நிற்கிறார். அவரை ஆசைகாட்டி அரசியலுக்குள் இழுக்க முடியாது. அச்சுறுத்தி வெளியேற்றவும் முடியாது. ரசிகர்களின் விருப்பத்துக்கேற்ப அவர் கட்சி தொடங்க விரும்பியது உண்மை. வலதுசாரிகளின் தலையீடு, ஆதிக்கம் மேலோங்கி வரும் சூழலால், அது நமக்கு உகந்த அல்ல என தீர்க்க தரிசனமாக உணர்ந்து கைவிட்டார் என்பதுதான் உண்மை.
அவரை நேரில் சந்தித்து உரையாடியதில் இருந்தும், அவரை புரிந்துகொண்டும் நான் சொல்லும் கருத்து இது. அவரை திமுக அச்சுறுத்தியதும், அச்சமடைந்து அவர் பின்வாங்கியதாக கூறுவது கற்பனை. இதெல்லாம் அவரது ஆளுமையை கொச்சைப்படுத்தும் விமர்சனம்.
சசிகலா புதிய அரசியல் கட்சி பெயரை அறிவித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள். அரசியல் ரீதியாக அவர் என்ன முடிவெடுக்கிறார் என பொறுத்து இருந்து பார்ப்போம்.
திமுகவை எதிர்க்கும் மாற்றுக் கூட்டணி இன்னும் உருவாகவில்லை. அதிமுக சிதறிக் கிடக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணியும் இன்னும் முழுமையாகவில்லை. ஒன்று சேரவில்லை” என்று அவர் கூறினார்.
