தூத்துக்குடி மாணவி உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு; கனிமொழியை முற்றுகையிட்டதால் பரபரப்பு

தூத்துக்குடி மாணவி உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு; கனிமொழியை முற்றுகையிட்டதால் பரபரப்பு
Updated on
3 min read

தூத்துக்குடி: குளத்தூர் அருகே வேடநத்தம் காட்டுப் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறுத்துள்ளனர். மாணவியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிவிட்டு வந்த திமுக எம்.பி. கனிமொழியை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, நேற்று இரவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘மாணவி கொலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கொலை செய்யப்பட்ட மாணவியின் சகோதரிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு, ‘குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து விசாரணை நடக்கிறது. மாணவியின் சகோதரி படித்துக் கொண்டிருக்கிறார். அவர் படிப்பை நிறைவு செய்யட்டும். அவருக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால், அவர்களது போராட்டம் தொடர்ந்தது. இரவு 10.30 மணியளவில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் வேடநத்தம் மற்றும் குளத்தூர் ஆகிய இடங்களில் போராட்டத்தை தொடர்ந்தனர். இன்று அதிகாலை 6 மணியளவில் ‘குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என போலீஸார் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனாலும், குற்றவாளிகளை கைது செய்ய பின்னரே மாணவியின் உடலை பெற்றுக் கொள்வோம் என உறுதியாக தெரிவித்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி இன்று காலை வேடநத்தம் வந்து, கொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். அவரிடம் உறவினர்கள் நடந்தவற்றை கூறினர். ‘மாணவியின் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். மாணவியின் சகோதரிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர். குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்னரே மாணவியின் உடலை பெறுவோம் என்றும் தெரிவித்தனர்.

“இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கக் கூடாது. இது தொடர்பாக போலீஸார் துரிதமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகளை கைது செய்யப்படுவார்கள். மாணவியின் சகோதரி படித்து முடிக்கட்டும்” என கனிமொழி எம்.பி. தெரிவித்தார். அப்போது அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. கூறுகையில், 'இளம் மாணவிக்கு மிகப் பெரிய கொடுமை நடந்துள்ளது. ஏடிஎஸ்பி தலைமையில் 4 டிஎஸ்பிக்கள், 6 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 10 குழுக்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் விரைந்து கண்டுபிடிக்க வேண்டுமென்ற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டுள்ளனர். முதல்வர் கண்காணித்து வருகிறார். விரைவில் மாணவி இறப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு மிக கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும்” என்றார்.

முற்றுகையிட்ட கிராம மக்கள்:

பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு கனிமொழி எம்.பி. வெளியே வந்தபோது, கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் அவரை சூழ்ந்து கொண்டு, 3 நாட்களாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என குற்றம்சாட்டினர். அவர்களிடம் கனிமொழி எம்.பி. விளக்கமளித்தார். அப்போது பெண்கள் “நேற்று முழுவதும் ரோட்டில் உட்கார்ந்திருந்தோம். யாரும் வந்தும் என்னவென்று கேட்கவில்லை. இரவு முழுவதும் போராட்டம் நடத்தினோம். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது” என்றனர்.

அவர்களிடம் பேசிவிட்டு கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் புறப்பட்டபோது, சிலர் அவர்களை மீண்டும் மறித்தனர். போலீஸார் அவர்களை விலக்கிவிட்டு, எம்.பி., அமைச்சரை பத்திரமாக அழைத்துச் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம் குளத்​தூர் அருகே வேடநத்​தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி. குறுக்​குச்​சாலை அரசு மேல்​நிலைப்​பள்​ளி​யில் 12-ம் வகுப்பு பொதுத்​தேர்வு எழுதி வந்​தார். வேடநத்​தம் கிராமத்​தில் பல வீடு​களில் கழிப்​பிடம் இல்​லாத நிலை​யில், இயற்கை உபாதையை கழிக்க அரு​கில் உள்ள காட்​டுப்​பகு​திக்கு கடந்த 10-ம் தேதி இரவு அந்த மாணவி சென்​றார். அதன்​பின்​னர் அவர் வீடு திரும்​ப​வில்​லை. பெற்​றோர் உடனடி​யாக 10-ம் தேதி இரவு குளத்​தூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்க சென்​றனர். போலீ​ஸார் அவர்​களை, விளாத்​தி​குளம் மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்க அறிவுறுத்​தினர்.

11-ம் தேதி காலை விளாத்​தி​ குளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது, அங்​கும் புகாரை பெறாமல் பலமணி நேரம் அலைக்​கழிக்​கப்​பட்​டனர். இதனால், மாணவியின் தந்தை மீண்​டும்குளத்தூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். இந்​நிலை​யில், 11-ம் தேதி மாலை வேடநத்​தம் காட்​டுப்​பகு​தி​யில் முகத்​தில் காயங்களு​டன் அந்த மாணவி இறந்​து கிடந்​தார். அதிர்ச்சியடைந்த பெற்​றோரும், பொது​மக்​களும் குறுக்​குச்​சாலை - ராமேசுவரம் சாலை​யில் வேடநத்​தம் அருகே இரவு மறியலில் ஈடு​பட்​டனர். போலீ​ஸாரின் உறு​தி​மொழியை ஏற்று நேற்று அதி​காலை 1 மணி​யள​வில் மறியல் கைவிடப்​பட்​டது.

ஆனால், நேற்று காலை​யாரும் கைது செய்​யப்​ப​டாத​தால், மதுரை - தூத்​துக்​குடி தேசிய நெடுஞ்​சாலை​யில் குறுக்​குச்​சாலை விலக்​கில் காலை 9 மணி முதல் மீண்​டும் மறியல் தொடங்​கியது. நெல்லை சரக டிஐஜி சரவணன், சார் ஆட்​சி​யர் ஹிமான்ஷூ மங்​கள், எஸ்​.பி. மதன் மற்​றும் போலீ​ஸார் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யும் உடன்​பாடு ஏற்​பட​வில்​லை. போராட்​டத்​துக்கு அதி​முக, நாம் தமிழர், தவெக, பாஜக, புதிய தமிழகம், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், இந்​திய கம்​யூனிஸ்ட் உள்​ளிட்ட கட்​சி​யினர் ஆதரவு தெரி​வித்​தனர்.

மாலை 5 மணியை கடந்​தும் போராட்​டம் நீடித்​தது. தேசிய நெடுஞ்​சாலை​யின் இரு​புற​மும் வாக​னங்​கள் அணிவகுத்து நின்​றன. போக்​கு​வரத்து மாற்று வழி​யில் திருப்பி விடப்​பட்​டது. இதேவேளை​யில், மாணவியின் உறவினர்​களில் மற்​றொரு தரப்​பினர், மாணவியின் சடலத்தை வாங்க மறுத்து தூத்​துக்​குடி விவிடி சந்​திப்பு அருகே மறியலில் ஈடு​பட்​டனர். அவர்​களை போலீ​ஸார் தடுத்​த​தால் கடும் வாக்​கு​வாதம் மற்​றும் லேசான தள்​ளுமுள்ளு ஏற்​பட்​டது. போலீ​ஸார் பேச்​சுவார்த்தை நடத்​தி​யதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்​டனர்.

பெண் ஆய்​வாளர் சஸ்​பெண்ட் இச்​சம்​பவத்​தில் புகாரை வாங்க போலீ​ஸார் மறுத்​த​தாக எழுந்த புகார் குறித்து அதி​காரி​கள் விசா​ரணை மேற்​கொண்​டு, நெல்லை சரக டிஐஜி​யிடம் அறிக்கை சமர்ப்​பித்​தனர். அதன்​பேரில், விளாத்​தி​குளம் மகளிர் காவல் நிலைய ஆய்​வாளர் பிர​வீ​னாவை பணி​யிடை நீக்​கம் செய்​து, டிஐஜி சரவணன் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாணவி உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு; கனிமொழியை முற்றுகையிட்டதால் பரபரப்பு
காவல் துறையின் மெத்தனம் ஏற்புடையது அல்ல: தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் ஐகோர்ட் காட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in