“ஊழல் பற்றி பேச அமித் ஷாவுக்கு என்ன தகுதி இருக்கிறது?” - கே.பாலகிருஷ்ணன்

புதுச்சேரி போலி மருந்து விவகாரத்தில் போராடிய மார்க்சிஸ்ட் கட்சியினர் 130 பேர் கைது
புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டப்பேரவை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது.

புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டப்பேரவை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது.

Updated on
2 min read

புதுச்சேரி: “ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழலில் மூழ்கியிருக்கும் பாஜக அரசுக்கு தலைமை தாங்கும் உங்களுக்கு ஊழலைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரியில் போலி மருந்து முறைகேடு மற்றும் பல்வேறு துறைகளில் ஊழலில் மூழ்கியுள்ள என்.ஆர். காங்கிரஸ் - பாஜக அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டப்பேரவை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது.

போராட்டத்துக்கு அக்கட்சியின் கட்சியின் மாநில குழு ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமை தாங்கினார். அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆளும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக அவர்கள் ராஜா திரையரங்கம் அருகே உள்ள காமராஜர் சிலையில் இருந்து நேரு வீதியில் சட்டப்பேரவை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை நேரு வீதி - கேன்டீன் வீதி சந்திப்பில் போலீஸார் சாலையின் குறுக்கே தடுப்புகளை அமைத்து தடுத்தனர்.

இருப்பினும் போலீஸாரின் தடுப்புகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்ததால் அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கேயே சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 130 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் அப்போது செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசு 5 ஆண்டு கால ஆட்சியில் அறிவித்த எதையுமே நிறைவேற்றவில்லை. போலி மருந்து தயாரித்து பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக செய்திகள் வருகின்றன.

மருத்துவத் துறை அதிகாரிகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகாரிகளை மட்டும் கைது செய்துவிட்டு ஆட்சியில் இருப்பவர்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். மருத்துவத் துறைக்கு பொறுப்பாக இருக்கின்ற ரங்கசாமிக்கு சம்மதம் இல்லாமலா போலி மருந்து தயாரிக்கப்பட்டது. எனவே, என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு இதற்கு முழுமையாக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

சமீபத்தில் புதுக்கோட்டைக்கு வந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஊழல் எங்கே இருந்தாலும் அதனை ஒழிப்பதற்கு நாங்கள் தயங்கமாட்டோம் என்று ஆக்ரோஷமாக முழங்கினார். அமித் ஷாவை பார்த்து நான் கேட்க விரும்புவது, புதுக்கோட்டையில் ஊழலைப் பற்றி பேசும் நீங்கள் ஏன் புதுச்சேரி ஊழலைப் பற்றி பேச மறுக்கிறீர்கள்?

ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழலில் மூழ்கியிருக்கும் பாஜக அரசுக்கு தலைமை தாங்கும் உங்களுக்கு ஊழலைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?

புதுச்சேரிக்கு சமீபத்தில் வந்த தவெக தலைவர் விஜய் கூட ஊழல் புரிந்த புதுச்சேரி அரசை மிகவும் புகழ்ந்து பேசினார். தவெக தலைவரை நான் கேட்டுக் கொள்வதெல்லாம் போலி மருந்து உள்ளிட்ட அனைத்திலும் ஊழலில் மூழ்கியிருக்கிற இந்த அரசுக்கு வக்காலத்து வாங்குவதன் ரகசியம் என்ன என்பதை விளக்க வேண்டும்.

போலி மருந்து விவகாரத்தில் தொடர்புடையவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்தக் காலத்தில் நடந்திருந்தாலும் கைது செய்ய வேண்டும். சிபிஐ விசாரணை நியாயமாக நடக்க வேண்டும் என்றால் குற்றவாளிகளாக இருக்கும் ஆட்சியாளர்களை வெளியேற்றினால் தான் நியாயமாக நடக்கும்” என்று அவர் கூறினார்.

அப்போது, திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு குறித்து கேட்டபோது, “திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாக தீபம் ஏற்றப்படும் இடத்தில் ஏற்றுவதுதான் நடைமுறை. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் புதிதாக ஓரிடத்தில ஏற்ற வேண்டும் என்று சொல்கிறார்.

தீபம் ஏற்ற வேண்டுமா வேண்டாமா என்று தீர்மானிக்கும் அதிகாரம் கோயில் நிர்வாகத்துக்குத்தான் இருக்கிறது. அதை நீதிமன்றம் சொல்ல முடியாது. ஏற்கெனவே இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் பலமுறை தீபம் ஏற்றப்படும் இடத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லியுள்ளனர். அப்படி இருக்கும்போது இப்போதுள்ள நீதிபதிகள் புதிய இடத்தில் ஏற்றலாம் என்று உத்தவிட்டுள்ளனர். இதனை மேல்முறையீட்டுக்கு சென்று கடைசியாக உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்கிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

<div class="paragraphs"><p>புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டப்பேரவை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது.</p></div>
தமிழக ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in