

ஆளுநர்ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (ஜன.6) காலை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது ஆளும் திமுக அரசுக்கு எதிராக மனு ஒன்றை அவர் ஆளுநரிடம் வழங்கினார்.
இது தொடர்பாக அதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று (6.1.2026 – செவ்வாய்க் கிழமை), சென்னை, லோக் பவனில் மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார்.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தற்போதுவரை நடைபெற்றுள்ள பல்வேறு ஊழல்கள் குறித்து உள்ளடங்கிய பட்டியலை உரிய ஆதாரங்களுடன் நேரில் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, அதிமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி, பொருளாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச் செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா. விசுவநாதன், தலைமை நிலையச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. தங்கமணி, கழக அமைப்புச் செயலாளரும், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், கழக அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், ஆகியோரும் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். நேற்று திருச்சியில் இரண்டாவது நாளாகவும் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கூட்டணி விவகாரங்கள், தொகுதிப் பங்கீடு பற்றி ஆலோசிக்கப்பட்டதாக அதிமுக நிர்வாகிகள் கூறினர். இருப்பினும் அந்தப் பேச்சுவார்த்தையில் அமித் ஷா திருப்தியடையவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்துள்ளனர்.