“மார்க்சிஸ்டுக்கு 5 இடங்களை திமுக ஒதுக்கியதில் திருப்தி இல்லைதான், ஆனால்...” - கே.பாலகிருஷ்ணன் விவரிப்பு

கோப்புப்படம் 

கோப்புப்படம் 

Updated on
2 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியை வீழ்த்துவதற்கான பரந்த மேடையை அமைக்க திமுக - காங்கிரஸ் தலைமை தவறிவிட்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லாஸ்பேட்டை தொகுதியில் ராஜாங்கம், திருபுவனை தொகுதியில் தட்சிணாமூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த வேட்பாளர்களை அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணியை முறியடிக்கிற திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இணைந்து போட்டியிடுகிறது. அப்படிப்பட்ட நிலை புதுச்சேரியில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், இங்குள்ள காங்கிரஸ் - திமுக தலைவர்களின் அணுகுமுறை, அவர்களின் சொந்த சுயநலபோக்கால் அப்படிப்பட்ட நிலை ஏற்படவில்லை.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியை வீழ்த்துவதற்கான பரந்த மேடையை அமைக்க திமுக - காங்கிரஸ் தலைமை தவறிவிட்டது. அவர்களை வீழ்த்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட முன்வர வேண்டும். திமுக - காங்கிரஸுக்கு எல்லா இடங்களிலும் வாக்கு போடுங்கள் என்று சொல்லும் நிலைமை இப்போது இல்லை. ஏனென்றால், அவர்களுக்குள்ளே போட்டி போட்டுக் கொள்கின்றனர். எங்களை எதிர்த்தும் போட்டி போடுகின்றனர்.

நமக்குள் பரஸ்பர போட்டி என்பதை ஏற்க முடியாது. தேர்தலில் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றால் ஒவ்வொரு கட்சியும் விட்டுக்கொடுக்க வேண்டும். காங்கிரஸ் - திமுக விட்டுக் கொடுக்காததால் கூட்டணியே வலுவானதாக இல்லாமல் பலகீனமாகிவிட்டது. ஆனால் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். என்.ஆர்.காங்கிரஸ் - பாஜகவை வீழ்த்துகின்ற வலுவான வேட்பாளர்களை மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள்.

புதுச்சேரி தேர்தல் மட்டுமல்ல, பல தேர்தல்களில் கூட்டணியே அமைந்தாலும் கூட, அந்தக் கூட்டணியில் இருப்பவர்களே சில நேரங்களில் விலகி தனித்து போட்டியிடுவதை பார்க்கின்றோம். அந்த அடிப்படையில் இங்கு நிற்கின்றனர். நிச்சயம் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் பரஸ்பர ஒற்றுமை இல்லாவிட்டாலும் பாஜக-என்.ஆர்.காங்கிரஸை வீழ்த்துகிற வேட்பாளர்களை மக்கள் வெற்றி அடையச் செய்வார்கள். கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் இரு கட்சிகளும் விட்டுக் கொடுத்துத்தான் கூட்டணி அமைக்க வேண்டும்.

நாங்கள் எங்கள் பிடியிலேயே இருப்போம் என்றால் கூட்டணி எப்படி அமையும். ஒவ்வொரு தேர்தல்களிலும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும்போது சூடான விவாதங்கள் நடப்பது இயற்கைதான். கூட்டணி கட்சிகள் தங்களுக்கு அதிக இடங்களை கேட்டு வற்புறுத்துவது, கேட்பது இயற்கையாக நடக்கும். ஆனால், இறுதியாக அந்தக் கூட்டணி ஒருமித்த கூட்டணியாகத்தான் அமையும். அதுதான் தமிழகத்தில் நடந்துள்ளது.

தமிழகத்தில் எங்களுக்கு கொடுத்துள்ள 5 இடங்கள் திருப்தி அளிக்கவில்லை என்பதை நாங்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். திமுக தலைமையிடமும், பொது மக்களிடமும் சொல்லியுள்ளோம். ஆனால், இந்த இடங்கள் திருப்தியளிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக பாஜக கூட்டணியை எதிர்க்கும் போராட்டத்தை பலவீனப்படுத்திவிடக் கூடாது. அதனை பயன்படுத்தி அவர்கள் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் நாங்கள் செயல்படுகிறோம். அதுபோன்ற உணர்வு புதுச்சேரியில் இருக்கும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் தலைவர்களுக்கு இல்லை என்பதுதான் எங்களின் வருத்தம்.

லாஸ்பேட்டை, திருபுவனை தொகுதிகளில் சிபிஎம் போட்டியிடுகிறது. அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் இரண்டு தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு எங்களது ஆதரவை தெரிவிப்போம். மற்ற தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியை வீழ்த்துவதற்கான அரசியல் கடமை ஆற்றுவோம்” என்று அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்&nbsp;</p></div>
தமிழகத்தில் மார்ச் 28 முதல் ஏப்.1 வரை லேசான மழை வாய்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in