

சென்னை: என்எல்சியின் பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தவாக தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
பெ.சண்முகம்: தமிழகத்தின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் மாநில பொருளாதார கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுதல் என நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) நிகழாண்டில் ரூ.3,670 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது.
இந்நிலையில் இந்நிறுவனத்தின் மூன்று சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது பொதுத்துறை நிறுவனங்களை சீரழிக்கும் செயலாகும்.
நாட்டில் லாபம் ஈட்டிவரும் நவரத்தின பொதுத்துறை நிறுவனங்களை தேசிய பணமயமாக்கல் திட்டம் என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்த்து வருவதன் தொடர்ச்சியே, என்எல்சி நிறுவனத்தின் பங்குகளையும் விற்க முடிவு செய்திருப்பதாகும். என்எல்சியின் பங்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.
தி.வேல்முருகன்: நெய்வேலியில் கடந்த 50 ஆண்டுகளாக லாபத்தில் இயங்கிவரும் என்எல்சி நிறுவனம், தமிழகத்தில் இருந்து கிடைக்கும் லாபத்தை கடந்த 2002-ல் 49 சதவீதம், 2006-ல் 10 சதவீதம், 2013-ல் 5 சதவீதம் என விற்பனை செய்ய முயற்சித்தது. ஆனால் அரசியல் இயக்கங்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்ததன் விளைவாக அந்த முயற்சிகள் தடுக்கப்பட்டன.
3 சதவீத பங்குகள்
இந்நிலையில் என்எல்சியின் 3 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும். இல்லையெனில், இதை எதிர்த்து தவாக கட்சி போராட்டத்தில் குதிக்கும். இவ்வாறு அவர்கள் கூறிஉள்ளனர்.