

சென்னை: ஆளுநர் மாளிகைக்கு பொதுமக்களை அழைத்து போட்டி அரசாங்கம் நடத்த முயற்சிப்பதாக தமிழக ஆளுநருக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், தவாக தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
மு.வீரபாண்டியன்: ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ஆளுநர் அர்லேகர், மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஆளுநர் மாளிகையை அணுகலாம். கோரிக்கைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம் என பேசியிருப்பது மாநில அரசின் நிர்வாகத்தில் நேரடியாக தலையிடும் அதிகார அத்துமீறலாகும்.
இது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சிக்கு எதிராக, ஒரு போட்டி அரசாங்கம் நடத்தும் பகிரங்க அறிவிப்பாகும். ஆளுநர் அதிகாரம் குறித்து தெளிவாகவும், திட்டவட்டமாகவும் வரையறுத்து உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எனவே, ஆளுநரின் அதிகார அத்துமீறல் நடவடிக்கையை தமிழக அரசும், முதல்வரும் தடுத்து நிறுத்த உடனடியாக, சட்ட நடவடிக்கைகளையும், அரசியல் ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். குடியரசுத் தலைவரும் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.வேல்முருகன்: ஆளுநர் அர்லேகர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் போல ஆய்வுக்கூட்டம் நடத்துவதும், ‘என்னிடம் கோரிக்கைகளை சொல்லுங்கள்’ என்று கேட்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
மத்திய அரசுடன் இணக்கமாக செல்வது வேறு, இணங்கி செல்வதுவேறு. இதை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது இணங்கி செல்வதை போன்று தோற்றமளிக்கிறது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கடந்த கால வரலாறுகளை தமிழக முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும்.