மதுரை: தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகைக்காக விண்ணப்பித்த 5.29 லட்சம் பேருக்கு உதவித்தொகை வழங்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் இயக்கத் தலைவர் சுவாமிமலை சுந்தர விமலநாதன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மருத்துவர்களால் அங்கீகரிக்கப்பட்டு, தேசிய அடையாள அட்டை மற்றும் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் தனித்துவ அடையாள அட்டை பெற்ற 21 வகையான மாற்றுத் திறனாளிகள் 5.29 லட்சம் பேர் உள்ளனர்.
இவர்கள் மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.300 பெற இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்தனர். ஆனால், இதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை.
இவர்கள் மாதந்தோறும் ரூ.300 பெறத் தகுதியானவர்கள். மேலும், ரூ.300 என்பதை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். எனவே, மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக உதவித்தொகையை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.பூர்ணிமா அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர், மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு, நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.