

மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன்
சென்னை: சென்னை மாநகராட்சியில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் முதல் கட்டமாக ரூ.43.98 கோடியில் 36 புதிய பூங்காக்கள், 11 விளையாட்டு திடல்கள் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வதற்காக 2026-31 கால கட்டத்துக்கு ரூ.1.50 லட்சம் கோடி மதிப்பீட்டில் முதல்வரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ரூ.2,000 கோடி நிதி: இதில் குடிநீர், பாதாளச் சாக்கடை, சாலைகள் மற்றும் பொது சுகாதார கட்டமைப்புடன் சேர்த்து, நகர்ப்புற பசுமையாக்கல் மற்றும் பொழுதுபோக்கு திறந்தவெளிகள் மேம்பாட்டுக்காக மட்டும் மாநில அளவில் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சியில் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் முதல் கட்டமாக ரூ.34.45 கோடி மதிப்பீட்டில் 36 இடங்களில் புதிய பூங்காக்கள் உருவாக்கப்பட உள்ளன.
அந்த வகையில் கத்திப்பாரா - விமான நிலைய நுழைவு பகுதி, மணலி எலந்தனூர், பெரியார் நகர், அம்பத்தூர் சிடிஎச் சாலை, குமரன் நகர், பார்க் சாலை, ஜீவன் பீமா நகர், முகப்பேர் தொழிற்பேட்டை, ஈவிஆர் சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, பீட்டர்ஸ் சாலை, நெற்குன்றம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் கிழக்கு கடற்கரை சாலை, கண்ணகி நகர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் இந்த பூங்காக்கள் அமையவுள்ளன.
ஒப்பந்தப் புள்ளிகள்: அதேபோல், விளையாட்டு உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக மாதவரம் அமிர்தம்மாள் நகர், அசோகா தெரு, தண்டையார்பேட்டை அம்பேத்கர் கலைக் கல்லூரி வளாகப் பகுதி, ஈஎச் சாலை, மேயர் கிருஷ்ணமூர்த்தி நகர், கோடம்பாக்கம் ஆர்வி நகர், மற்றும் சோழிங்கநல்லூர் சிஎல்ஆர்ஐ நகர், டிஎன்எச்பிஏ சாலை உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 11 இடங்களில் ரூ.9.52 கோடி செலவில் 11 புதிய விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்பட உள்ளன. இப்பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இவை நிறைவடைந்தவுடன் களப்பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.