

படம்: ம.பிரபு
சென்னை: தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், புத்தாடைகள், பலகாரப் பொருட்கள் வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர். ஜவுளிக்கடைகளில் விற்பனை களைகட்டியது.
தீபாவளி பண்டிகை நவ.8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், நேற்று காலை முதலே சென்னையின் முக்கிய வணிகப் பகுதிகள் அனைத்தும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தன. திரும்பும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம் காணப்பட்டது. சாலைகள் எங்கும் வாகனங்களாக காட்சியளித்தன.
புத்தாடைகள், பலகாரப் பொருட்கள், பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஜவுளிக் கடைகளிலும் கடைவீதிகளிலும் குவிந்தனர். இதனால் தலைநகரின் பிரதான வர்த்தக மையங்களான தியாகராய நகர், புரசைவாக்கம், பிராட்வே, வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை, பாடி ஆகிய பகுதிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள விதவிதமான புதிய ரக ஆடைகளை தேர்ந்தெடுக்க மக்கள், குடும்பம் குடும்பமாக கடைகளில் ஏறி இறங்கி ஆர்வத்துடன் ஷாப்பிங் செய்தனர்.
பேன்ட், சட்டை, சுடிதார், பட்டுச்சேலைகள் முதல் பாரம்பரிய வேஷ்டிகள் வரை அனைத்து ஆடைகளும் விறுவிறுப்பாக விற்றுத் தீர்ந்தன. பிரபல ஜவுளி நிறுவனங்கள் மட்டுமின்றி, சாலையோரக் கடைகளிலும் வியாபாரம் களைகட்டியது. புறநகர் பகுதிகளான திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் வணிக வளாகங்கள் நிரம்பி காணப்பட்டன. ஷாப்பிங் முடித்து மக்கள் குடும்பத்துடன் உணவருந்த சென்றதால் ஓட்டல்கள், பேக்கரிக்களில் நீண்டவரிசை காணப்பட்டது.
கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு போன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்க முக்கிய வணிக வீதிகளில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், மைக் மூலம் எச்சரிக்கை விடுத்தும் காவல் துறையினர் கூட்டத்தை கண்காணித்து வருகின்றனர். சாலையில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்து போலீஸார் தீவிர சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். வாரக் கடைசி நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கடைவீதிகளில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.