

சென்னை: வில்லிவாக்கம் ஏரியில் 8.5 ஏக்கரில் கூடுதல் குளம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க, மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை குடிநீர் வாரியம் வசம் இருந்த வில்லிவாக்கம் ஏரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்க, 27.5 ஏக்கர் கொண்ட ஏரிப் பகுதி, மாநகராட்சியிடம் வழங்கப்பட்டது.
இதில் முதற்கட்டமாக, ஏரியின் கொள்ளளவு 20 ஆயிரம் கனமீட்டரிலிருந்து, 2.90 லட்சம் கனமீட்டராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஏரிக் கரைகள் அமைத்தல், இருக்கைகள் அமைத்தல், குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல், நடைபாதை அமைத்தல், ஏரிக்கு மழைநீர் செல்ல மழைநீர் வடிகால் பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், ஏரியின் குறுக்கே கண்ணாடி தொங்கும் பாலம் உள்ளிட்ட பணிகள் ரூ.7.44 கோடியில் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், ரூ.45 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஏரியை சுற்றி வேலி அமைத்தல், ஏரி மற்றும் தொங்கும் பாலத்துக்கு எல்இடி விளக்குகள் பொருத்துதல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் 2-ம் கட்டமாக, தனியார் கூட்டு பங்களிப்பு திட்டத்தின் கீழ், வண்ண இசை நீரூற்று, படகு குழாம், புல்வெளி பாதை, சிறுவர் ரயில், நீர்நிலையில் சறுக்கு விளையாட்டு, பறவைகள் பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு பூங்காவாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் நேற்று நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த தனியார் கூட்டு பங்களிப்பு மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1 கோடி வருவாய் கிடைக்கும்.
மேலும், இப்பகுதியில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அறிவுறுத்தல்படி, 8.50 ஏக்கர் பரப்பளவில் சுமார் 60 ஆயிரம் கனமீட்டர் நீர் கொள்ளளவு தேக்கி வைக்கும் வகையில், கூடுதலாக ஒரு குளம் 8.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.7.90 கோடியில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையும் ஆணையர் சமீரன் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, மேற்பார்வைப் பொறியாளர் (சிறப்பு திட்டங்கள்) சுந்தரராஜன், மண்டல அலுவலர் இனியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.