சிலிண்டர் விலை உயர்வு மோடி ஆட்சியின் கார்ப்பரேட் ஆதரவு பாதையின் விளைவு: சிபிஎம் கண்டனம்

சிலிண்டர் விலை  உயர்வு மோடி ஆட்சியின் கார்ப்பரேட் ஆதரவு பாதையின் விளைவு: சிபிஎம் கண்டனம்
Updated on
2 min read

சென்னை: “மோடி அரசின் செங்குத்தான சமையல் எரிவாயு விலை உயர்வு சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தலையின் மீது இடியை இறக்கியுள்ளது. சர்வதேச முதலாளிகள் தீர்மானிப்பதை இந்திய உழைப்பாளி மக்களின் தலையில் சுமத்தும் கார்ப்பரேட் ஆதரவு பாதையை மோடியின் ஆட்சி தீவிரப்படுத்துவது மேலும் இதுபோன்ற விளைவுகளை ஏற்படுத்தும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கிறது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூபாய் 60 உயர்த்தியுள்ளது. ஏற்கனவே மோடி அரசின் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிக் கொடுமையினாலும், விலைவாசி உயர்வினாலும் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வரும் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு தற்போது எரிவாயு விலையை உயர்த்தி மக்கள் தலையின் மீது இடியை இறக்கியுள்ளது.

இந்த விலை உயர்வினால் சங்கிலித் தொடர் போல உணவுப் பொருட்களின் விலைகள் பல மடங்கு உயரும் ஆபத்து உள்ளது. இந்த எரிவாயு விலை உயர்வினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு, உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பொருட்களின் விலை குறைந்த போதும் பெட்ரோல் - டீசல், சமையல் எரிவாயு விலைகளை ஒன்றிய பாஜக அரசு குறைக்கவில்லை. தற்போது ஈரான் மீது அமெரிக்கா ஏகாதிபத்தியமும் இஸ்ரேலும் இணைந்து நடத்தும் போர் காரணமாக, எரிவாயு, பெட்ரோல் உள்ளிட்ட எந்த ஒரு எரிபொருளுக்கும் தட்டுப்பாடு இருக்காது என கடந்த சில நாட்களாக பாஜக ஆட்சியினர் பேசி வந்தனர். தற்போது சிலிண்டருக்கு ரூபாய் 60 உயர்த்தி இருப்பது அநியாயமானது.

ஏகாதிபத்தியத்தின் போர்வெறியை, ஈரான் நாட்டின் எண்ணெய் வளத்தை, கொள்ளை அடிக்கும் ஆதிக்க வெறியை கண்டித்து, இந்தியாவும், இந்தியாவைப் போல் வளரும் நாடுகளையும், ஒருங்கிணைத்து, செயல்படுவதன் மூலம் போரை நிறுத்த முடியும். அதன் மூலம் எரிபொருள் தட்டுப்பாடுகளை தடுக்க முடியும்.

ஆனால், மோடி ஆட்சி அதற்கு தயார் இல்லை. இந்திய பிரதமர் மோடி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை இதுவரையிலும் கண்டிக்க கூட செய்யவில்லை. இது இந்திய இறையாண்மைக்கும், இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பாகும்.

அண்மையில் ரஷ்யாவிடம் இந்தியா, ஒரு மாத காலத்திற்கு பெட்ரோலியப் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என டிரம்ப அறிவித்ததை, தங்களது சாதனையாக சங்பரிவாரங்கள் ஆரவாரங்கள் செய்வதிலிருந்தே இவர்களுக்கு அமெரிக்கா மீது தான் விசுவாசம் என்பது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.

இப்போது பாஜக ஆட்சி அறிவித்துள்ள, எரிவாயு சிலிண்டருக்கு ரூபாய் 60 உயர்வுடன் விலை உயர்வு நிற்கப் போவதில்லை. அடுத்தடுத்து பெட்ரோலியம் சார்ந்த அனைத்து எண்ணெய் பொருள்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சர்வதேச முதலாளிகள் தீர்மானிப்பதை இந்திய உழைப்பாளி மக்களின் தலையில் சுமத்தும் கார்ப்பரேட் ஆதரவு பாதையை மோடியின் ஆட்சி தீவிரப்படுத்துவது மேலும் இதுபோன்ற விளைவுகளை ஏற்படுத்தும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கிறது.

எனவே, போருக்கு எதிராகவும், எரிவாயு விலை உயர்வுக்கு எதிராகவும், மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அனைத்துப் பகுதி மக்களையும் கேட்டுக் கொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

சிலிண்டர் விலை  உயர்வு மோடி ஆட்சியின் கார்ப்பரேட் ஆதரவு பாதையின் விளைவு: சிபிஎம் கண்டனம்
மகளிர் தினம்: முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in