மகளிர் தினம்: முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

Chief Minister Stalin | EPS

முதல்வர் ஸ்டாலின் |இபிஎஸ் 

Updated on
3 min read

சென்னை: மகளிர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘நீங்கள் வெல்வதற்கு உலகும் - உங்களுக்குத் துணை நிற்க திராவிட மாடலும் இருக்கிறது. தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உடன்நிற்க நமது திராவிட மாடல் அரசு இருக்கிறது... அனைவருக்கும் உங்கள் ஸ்டாலினின் உலக மகளிர் நாள் நல்வாழ்த்துகள்’ என்றார்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): ‘ ஒரு குடும்பத்தின் ஆணிவேராக இருந்து, துன்பங்களை சுமந்து அன்பையும், அரவணைப்பையும் வாரி வழங்கும் பெண்களின் தியாகத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை. இதனை உணர்ந்துதான் ஜெயலலிதா பெண்களுக்கான பல புரட்சிகரமான திட்டங்களைக் கொண்டு வந்தார்.

​இன்றைய விடியா திமுக ஆட்சியில், பாதுகாப்பற்ற சூழ்நிலையாலும், விலைவாசி உயர்வாலும், தத்தளிக்கும் பெற்றோர்கள் மற்றும் குடும்பத் தலைவிகளின் கவலை எனக்கு நன்றாகவே புரிகிறது. அந்த சுமையை குறைப்பதே எனது முதல் கடமை. அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன், குடும்பத்தின் பொருளாதார தூணாக இருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும். இது வெறும் பணம் அல்ல, பெண்களின் உழைப்புக்கான அங்கீகாரமும் மரியாதையும் ஆகும்.

பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எங்கள் அன்பின் அடையாளமுமாகும். மகளிர் சுயமாக சாதிக்க உதவும் வகையில் 5 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். உங்கள் கனவுகள் நனவாக, உங்கள் பாதுகாப்பு, நீங்கள் பயணிக்கும் போதும், நம் பிள்ளைகள் படிக்கின்ற இடங்களிலும், உங்கள் பணியிடங்களிலும் உறுதி செய்யப்பட, நான் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறேன்’

நயினார் நாகேந்திரன் (பாஜக): ‘கல்வியுடன் கூடிய தன்னம்பிக்கை மற்றும் அதிகாரம் பெற்ற பெண்களே ஒரு நாட்டின் வலுவான அடித்தளம். அறிவியல் முதல் தொழில்நுட்பம் வரை பல துறைகளில் பெண்கள் தங்கள் திறமையாலும் துணிவாலும் சாதித்து வருவது நம் சமூகத்தின் வளர்ச்சிக்கும் சமத்துவத்திற்கும் பெரும் ஊக்கமாக உள்ளது. அவர்களின் உறுதி, அர்ப்பணிப்பு மற்றும் சாதனைகள் நம் எதிர்காலத்தை இன்னும் நம்பிக்கையுடனும் வளமுடனும் வடிவமைக்கின்றன.

இந்த சிறப்பான நாளில், ஒவ்வொரு பெண்ணும் மரியாதை, பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்துடன் வாழக்கூடிய சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியாக இணைவோம். பெண்களின் கனவுகள் வளரவும், அவர்களின் திறமைகள் முழுமையாக வெளிப்படவும் சமமான வாய்ப்புகளை வழங்குவது நம் அனைவரின் பொறுப்பாகும்’

சீமான் ( நாம் தமிழர் கட்சி): ‘பெண்ணிய விடுதலையும், பாலினச்சமத்துவமும் நீண்ட நெடுங்காலமாகவே பேசப்படுபொருளாக இருக்கிறதே ஒழிய, செயலாக்கம் பெறவில்லை. ஆனால், அதனை ஈழத்தாயகத்தில் சாத்தியப்படுத்தி நிறுவிக்காட்டினார் நம்முடைய தலைவர் வே.பிரபாகரன். அவர்தம் பிள்ளைகள் அதனை தமிழ்நாட்டில் செயற்படுத்த அணியமாகி நிற்கிறோம்.

ஐக்கிய நாடுகள் அவை 2026-ஆம் ஆண்டு மகளிர் நாளுக்கான மையக்கருத்தாக "எண்ணியல் யுகத்தில் பாலின சமத்துவம்: பெண்களுக்கான அதிகாரமளித்தல் மற்றும் புதுமை" என்ற முழக்கத்தைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சி 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே, கடந்த 2016 ஆம் ஆண்டு, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே உலகில் இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியும் செய்திடாத செயற்கரிய செயலாக தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தேர்தலில் சரி பாதி இடங்களில் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தி, உண்மையான பாலின சமத்துவம் என்பது பெண்களுக்கான அதிகாரமளித்தல்தான் என்ற உண்மையைச் செயலில் நிறுவியது.

அது வெறும் சோதனை முயற்சியல்ல, சாதனை முயற்சி என்பதை அடுத்து வந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத்தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத்தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களிலும் தொடர்ந்து உலகிற்கு உணர்த்தியது. இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் அந்த சாதனையைத் தொடர்கிறது நாம் தமிழர் கட்சி. இது பெண்களுக்கு நாம் தமிழர் கட்சி தரும் சலுகை அல்ல; பெண்களுக்கான உரிமையை பெண்களையே எடுத்துக்கொள்ளச் செய்யும் நம் இனத்திற்கான பெருமை.

அடிமைத் தனத்திற்கும், உரிமைப் பறிப்புக்கும் எதிராகப் போராடி, மெல்ல மெல்ல மேலெழுந்து வரும் பெண்களை அடக்கி ஒடுக்கும் விதமாக, அண்மைக்காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல்கிப்பெருகி வருவது பெண்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும், அவர்களின் பாதுகாப்பான வாழ்வினைக் கேள்விக்குறியாக்குவதாகவும் உள்ளது. பெண்களுக்கு எதிரான இக்கொடுமைகள் ஒழிய பெண்களுக்கு அரசியல் அதிகாரப்பகிர்வை தருவது மட்டுமே நிலைத்த தீர்வாக அமையும். மகளிர்க்கான உரிமை என்பது அரசு வழங்கும் அற்பத்தொகையில் இல்லை. மக்கள் தொகையில் சரிபாதி உள்ள ‘மகளிர் தொகை’க்கேற்ப சம அதிகாரம் அளிப்பதே உண்மையான மகளிர் உரிமையாகும்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மட்டும் சரிபாதி பெண்கள் அல்ல; கட்சி கட்டமைப்பிலும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் மாநில ஒருங்கிணைப்பாளர் முதல் மண்டலச் செயலாளர் வரை பெண்களுக்குச் சமமான வாய்ப்பை வழங்குகின்றது நாம் தமிழர் கட்சி. உலகத்திலேயே பாலின சமத்துவத்தைக் கடைபிடிக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே. இதை ஏதோ வீண் பெருமைக்காகச் செய்யவில்லை. இது எங்களின் வரலாற்றுக் கடமை என எண்ணிச் செய்கிறோம்.

பெண்களுக்கு என்னென்ன உரிமைகள் தரவேண்டும், எவ்வளவு தர வேண்டும் என்ற அதிகாரத்தைத் தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு, சட்டங்களை ஆண்களே இயற்றுவது அல்ல பாலின சமத்துவம்; தங்களுக்குத் தேவையான சட்டத்தைத் தாங்களே இயற்றிக்கொள்ளும் அதிகாரத்தைப் பெண்களிடம் அளிப்பதுதான் உண்மையான பாலின சமத்துவமாகும். எனவேதான் நாம் தமிழர் கட்சி ஆணுக்குப் பெண் சமமல்ல; ஆணும் பெண்ணும் சமம்! என்ற கொள்கை முழக்கத்தை முன்வைத்து அரசியல் களத்தில் நிற்கிறது. அதன் அடுத்த படிநிலையாக பெண்கள் மட்டுமே போட்டியிட்டு வெற்றிபெறக் கூடிய வகையில் பெண்களுக்கெனத் தனிச் சட்டமன்ற, பாராளுமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டையும் முன்வைத்து நாம் தமிழர் கட்சி போராடுகின்றது.

எமக்கு ஒரு பெருங்கனவு உண்டு. இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றங்களிலும், இந்திய பெருநாட்டின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், சரிபாதி பெண்கள் அமர்ந்து அவைகள் நடைபெற வேண்டும் என்ற பெருங்கனவு எனக்கு உண்டு. அந்த நாள் வருகின்ற நாளே இந்த நாட்டில் உள்ள அனைத்து பெண்களும் உண்மையான சம உரிமைப்பெற்ற நாளாகும். அதற்கான வரலாற்று வழிதடத்தை நாம் தமிழர் கட்சி தம்முடைய கட்சி கட்டமைப்பு முதல் தேர்தல் வேட்பாளர்கள் வரை சரிபாதி பெண்களை நிறுத்தும் செயல்களால் செப்பனிட்டு வருகிறது.

ஒரு நாட்டில் வாழும் குடிமக்களின் அனைத்து உரிமைகளையும் தீர்மானிப்பது அரசு; அந்த அரசைத் தீர்மானிப்பது அரசியல்; எனவே கல்வி, வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு பெறுவது மட்டுமல்ல; அதிகார மையமான அரசியலில் பெண்கள் சம வாய்ப்பை பெற்று சம பங்களிப்பை என்றைக்கு செய்கிறார்களோ அந்த நாள்தான் உண்மையான மகளிர் நாளாக அமையும்’

டிடிவி.தினகரன் (அமமுக): ‘பெண்மையைப் போற்றி கொண்டாடும் இந்நாளில் தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் மகளிர் சுய உதவிக் குழுக்கள், இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், தாயின் முதலெழுத்தைக் குழந்தையின் தலைப்பெழுத்தாக பயன்படுத்துதல் என மகளிர் நலன் பயக்கும் நல்ல பல திட்டங்களைத் தீட்டி வெற்றிகரமாகச் செயல்படுத்தி பெண் இனத்தின் பெருமையாகத் திகழும் ஜெயலலிதாவை நினைவில் கொள்வோம்.

தாயாக, சேயாக, தமக்கையாக, தாரமாக என அனைத்திலும் அளப்பரிய பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் மகளிர் அனைவருக்கும் சமத்துவம் மற்றும் சம உரிமையோடு, அவர்களுக்கான பாதுகாப்பு முழுமையாக கிடைத்திடுவதையும் நாம் அனைவரும் இந்நாளில் உறுதி செய்திடுவோம்.

மகளிரின் அர்ப்பணிப்பு உணர்வை உலகிற்கு உணர்த்தும் இந்நாளில், தடைகளைத் தகர்த்தெறிந்து தன்னம்பிக்கையை ஏற்படுத்திட, அனைத்து துறைகளிலும் முன்னேறி நல்வாழ்வு அடைந்திட அனைத்து மகளிருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகள்’

Chief Minister Stalin | EPS
சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 41,000 பேருக்கு மே முதல் சம்பள உயர்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in